நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (கொழும்பு 6: R.S.T.என்டர்பிரைசஸ், 114, டபிள்யூ. ஏ.டீ சில்வா மாவத்தை).
87 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-1810-31-3.
இத்தொகுப்பில் நீர்வை பொன்னையன் எழுதிய மீட்பு, தரிசனம், முனைப்பு, நினைவுகள் அழிவதில்லை, இந்திரா, வந்தனா, சாயல் ஆகிய ஏழு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் யாவும் ஆசிரியர் 1950-1957 காலப்பகுதியில் கல்கத்தாவில் வாழ்ந்த வேளையில் அங்கு பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளன. தலைப்புக் கதையான ‘சாயல்” ஒரு பெண் டாக்டரின் கண்களுக்கூடாக, கல்லூரிக் காலத்தில் போராட்டக் குணத்தோடு இயங்கிய அவரது சிற்றன்னையை இனம்காணும் வித்தியாசமான கதையாக அமைகின்றது. “வந்தனா”வில் வறுமைப்பட்ட திறமைசாலிக்கு விடுதியில் இடமளித்து பின் ஒரு விலைமகளினால் போஷிக்கப்பட்டு தனது இலக்கை அடைந்து புவியியல் விஞ்ஞான ஆய்வாளனாக வெளிப்படும் ஒருவனைத் தரிசிக்கலாம். கலெக்டரான தன் சகோதரனுக்கு எதிராக அகதிகளுக்கு வாழ்வளிக்கும் வெகுஜன இயக்கப் பிரதிநிதியான இளம்பெண்ணொருத்தி வெற்றிவாகை சூடுவதை ‘இந்திரா”வில் காணமுடிகின்றது.