மானா மக்கீன் (இயற்பெயர்: எம்.எம்.மக்கீன்). சென்னை 600015: தாழையான் பதிப்பகம், 1வது தளம், 26/1, மசூதி பள்ளம், 1வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 14: யுனிவர்சல் பிரின்ட்ஸ்).
35 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 20.00, அளவு: 22×14 சமீ.
தமிழகத்தின் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த டி.எம்.பீர்முகம்மது 1949-1962 காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்து பதித்த தடங்களைத் தேடி ஆராய்ந்து பதிவுசெய்யும் புதியதொரு முயற்சியை தமிழ்மணி மானா மக்கின் அவர்கள் இந்நூலில் மேற்கொண்டிருக்கிறார். “டியெம்பி” என்ற பெயரில் டி.எம்.பீர்முகம்மது தொழிற்சங்கவாதியாகவும், நவஜீவன் -வார இதழிலும், நணபன் என்ற வார இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றிய வகையில் ஓர் இதழாளராகவும் நாவல் இலக்கியங்களை வழங்கிய வகையில் எழுத்தாளராகவும், இலங்கையில் அறியப்பெற்றவர்;. “டியெம்பி”யின் குரல் இலங்கை-மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களுக்காக மாத்திரம் ஒலிக்கவில்லை. சமுதாய மறுமலர்ச்சிக்காகவும் அவர் குரல்கொடுத்தார். அவரது “கங்காணி மகள்” எனும் நாவல் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலையும், ”சதியில் சிக்கிய சலீமா” எனும் நாவல் முஸ்லிம்களின் வாழ்வியலையும் பிரதிபலித்திருந்தன. அவரது பதினான்கு ஆண்டக்கால இலங்கை வாழ்வை மானா மக்கீன் அவர்கள் இந்நூலில் மேடைகளில் முழங்கிய பீரங்கி, இலங்கையில் நவஜீவனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த கல்லிடைக்குறிச்சியார், கல்லிடைக்குறிச்சியாரின் கங்காணி மகளும் சதியில் சிக்கிய சலீமாவும் ஆகிய மூன்று கட்டுரைகளின் வாயிலாக பதிவுசெய்திருக்கிறார். இவை முன்னர் தினக்குரல் வாரமலர், வீரகேசரி வாரவெளியீடு, சங்கமம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.