வராகிமிஹரர் (மூலம்). கொழும்பு 12: ரெக்ஸ் ஏஜென்சீஸ், த.பெ.எண் 673, 20, பிரைஸ் பிளேஸ், 5அவது பதிப்பு, டிசம்பர் 1965. (கொழும்பு 12: ரெக்ஸ் ஏஜென்சீஸ், த.பெ.எண் 673, 20, பிரைஸ் பிளேஸ்).
88, (32) பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12 சமீ.
இந்நூலில் வராகிமிஹரரின் எண் சோதிடம் பற்றி 15 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பம், உங்கள் எண் என்ன?, எண்களின் பயன்கள் (1 முதல் 9 வரை), பெயர் எண், பிறந்த எண்ணும் பெயரெண்ணும், எண் 4, 8 ஜாதகர்களுக்கு, 1-4, 2-7 ஜாதகர்களுக்கு, கலப்பு எண்கள், பெயரிடுதல், ஒரு புதிய விஷயம், அதிர்ஷ்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள், சூதாட்டமும் எண்களும், எண்களும் வண்ணங்களும், எண்களும் உடல்நலமும், ஊரும் எண்ணும் ஆகிய தலைப்புகளில் இவ்வத்தியாயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. வராகிமிஹரர் கி.பி. 505-587 காலகட்டத்தில் உச்சையினியில் வாழ்ந்த ஒரு இந்திய வானியலாளரும் கணித மேதையும் சோதிடருமாவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்பட்டவர். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார். அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை. இத்தோடு ஜோதிட அறிவையும், உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும் அவரது நூல்கள் மூலம் காண முடியும். இந்நூலின் இறுதி 32 பக்கங்களிலும் இந்திய நிறுவனமொன்றின் மருந்துகளின் விலைப்பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் தமிழாக்கம் பற்றிய குறிப்பெதுவும் நூலில் காணப்படவில்லை.