ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2024. (மின்நூல் வடிவம்).
iv, 126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பன்னிரு காவியங்களையும் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் உள்ளிட்ட பதினையாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்களை படைத்த பெருமை மிக்கவர். இயேசு என்று சொல்லப்படும் ஈஸா நபியின் பிறப்பிலிருந்து அவர் வானுக்கு உயர்த்தப்படுவது, பின் மீண்டும் தஜ்ஜாலின் வருகைக்குப் பின் திரும்பி வந்து அவனைக் கொல்வது, நாற்பது ஆண்டுகள் நல்லாட்சி புரிவது, பின்னர் நபி பெருமானார் அருகில் அடக்கம் செய்யப்படுவது எனப் பல விடயங்களைத் தொட்டு, திருமறை மற்றும் நபி மொழிகளை அடிப்படையாக வைத்து இக்காவியம் எழுதப்பட்டுள்ளது. நான்கு சீர்களும் எட்டு அடிகளும் கொண்ட பாடல்களால் இக்காவியம் ஆக்கப்பட்டுள்ளது. ரமலான் பிறை 18இல் ஈசா நபிக்கு இஞ்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டது என ஒரு பாடல் கூறுகின்றது. ரமலான் மாதத்தின் பெருமையையும் அது எடுத்துக் கூறுகின்றது. மலையிலிருந்து இறங்கி வந்தபோது குஷ்ட ரோகியை குணப்படுத்தியது, குருடர்கள் பார்வை பெற்றது, உடல் ஊனமுற்றவர்கள் ஊனம் நீங்கியது, ஊமைகள் பேசியது, கணிமண்ணால் செய்த பறவை உயிர் பெற்றுப் பறந்தது, இறந்தவனுக்கு உயிர் கொடுத்தது, எலும்பில்லாத உயிர் படைக்கக் கோரியபோது செய்தனுப்பிய களிமண் வெளவால் உயிர் பெற்றது போன்ற ஈஸா நபி செய்ததாகக் கூறப்படும் அற்புதங்களை ‘அற்புதங்களும் ஆரூடங்களும்’ என்ற பிரிவில் பாடியிருக்கிறார்.