எம்.எஸ்.அப்துல் ஹை. மட்டக்களப்பு: எம்.எஸ்.அப்துல் ஹை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (ஏறாவூர்: ஹிரா அச்சகம்).
133 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-99207-0-5.
1950-60களில் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அறியப்பெற்ற கவிஞர் புரட்சிக் கமாலின் மகனான கவிஞர் எம்.எஸ்.அப்துல் ஹை அவர்களின் படைப்பிலக்கிய வரிசையில் ‘நிலவைக் கேட்டுப்பார்’ என்னும் ‘உலக நிலா தமிழ் காவியம்’ வித்தியாசமானதொரு காப்பியப் புதுமைக்குள் எம்மை அழைத்துச் செல்கின்றது. நிலவு என்னும் ஓர் அஃறிணைப் பொருளை வாசகர் மத்தியில் முதன்மைப்படுத்தி அப்பழுக்கற்ற படிமக் குறியீட்டின் ஊடாக இசைந்து செல்லும் வகையில் ஒரு தூய உருவகத்தினூடே காப்பியத்தை நகர்த்திச் செல்லும் பொறிமுறையானது இக்கவிஞனை உயர்த்திவைக்கின்றது. வளர்ந்தும் நிறைந்தும் தேய்ந்தும் மறைந்தும் நிலையில்லா மாற்றங்களின் அச்சாணியில் சுழன்று கொண்டிருக்கும் அழகு நிலவைக் குறியீடாக்கிப் பேசவிட்டு உலக வாழ்வின் நிலையாமை பற்றி அலசுகின்ற ஒவ்வொரு கவிதையும் மானுட விழுமியம் பற்றியும் அதனூடாக கிடைக்கின்ற நிலைபேறான மானுட வாழ்வின் உன்னதம் பற்றியும் விபரிக்கின்றபோது அங்கே காப்பிய உலகின் பரிசோதனை முயற்சியான புதிய உத்தி வடிவங்களின் தரிசனங்களை காணமடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72016).