பாலமுனை பாறூக். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xvi, 154 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-35-1.
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 1970களில் முனைப்புப் பெற்ற இடதுசாரி சிந்தனைப் போக்கில் கவிதை எழுதத்தொடங்கிய பாலமுனை பாறூக் கல்முனைப் பிரதேசத்திலிருந்து சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக கவிதை எழுதிவரும் குறிப்பிடத்தக்க கவிஞராவார். 1987இல் ‘பதம’ என்ற கவிதைநூலின் வாயிலாக இலக்கிய உலகில் அறிமுகமானவர் பாலமுனை பாரூக். ‘கொந்தளிப்பு’ என்ற தனது குறுங் காவியத்தின் மூலம் தான் சார்ந்த பிரதேச, சமூக, பண்பாட்டு உணர்வுகளை மொத்தமாக வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக தென்கிழக்குப் பிரதேச முஸ்லிம்களின் வாழ்வினைப் புலப்படுத்தும் குறிப்பிடத்தக்கதொரு படைப்பாக பாலமுனை பாறூக்கின் கொந்தளிப்பு அமைந்துள்ளது. துணிச்சலுடன் அரசியல், சமூக, சுரண்டலுக்கு எதிரான கருத்துக்களை இக்காவியத்தில் முன்வைக்கிறார். ‘தோட்டப்பாய் மூத்தம்மா’ இவ்வாசிரியரின் நான்காவது நூலாக வெளிவந்த மற்றுமொரு குறுங்காவியம். இக்காவியத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப்பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப்போராட்டமும், விவாகரத்தும், மறுமணம் முடித்தலும் ஆகிய விடயங்கள் பாடுபொருளாக அமைந்துள்ளன. முஸ்லிம்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவுசெய்யும் வகையில் இக்குறுங்காவியத்தில் முஸ்லிம்களின் திருமணச்சடங்கு முறைமை, மையத்துச் சடங்கு, பிறப்புச் சடங்கு, பூப்படைதற் சடங்கு, பெண்பிள்ளைச் சுண்ணத்துச் சடங்கு ஆகிய விடயங்களை மிகவும் சுவைபடப் பதிவுசெய்திருந்தார். பலநூறு வருடங்களாக பேணப்பட்டுவந்த சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக்குறுங்காவியம் மிகக்கச்சிதமாகப் பதிவாக்கியிருக்கிறது. இவரது மற்றுமொரு குறுங்காவியம் ‘எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு’. போர்க்கால வாழ்வியலை, ஒரு பொதுமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஆரம்பிக்கும் இக்காவியம், போருக்குப் பிந்திய வாழ்க்கை முறைமையையும் சிறுபான்மையினரான தமிழரும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல, இணைந்து பிணைந்து ஒரு தாய் பிள்ளைகள் போல நெருக்கமாக வாழ்ந்ததையும் பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளையும் இக்காவியத்தில் அழகாகக் கூறிச் செல்கின்றார். இவரது காவிய எடுத்துரைப்பு முறையில் இயற்கையின் பின்புல வர்ணனை, வாழ்வியற் சித்திர வார்ப்பு, காட்சிப் படிமங்களின் உருவாக்கம், வட்டாரச் சூழலை உள்வாங்கிய பதிவு, பேச்சு மொழி ஓசை நயம் ஆகிய இன்னோரன்ன அம்சங்கள் பொலிவாக அமைந்துள்ளன. இம்மூன்று காவியங்களையும் உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 147ஆவது நூலாக வெளிவந்துள்ளது.