மூதூர் மொஹமட் ராபி. திருக்கோணமலை: எம்.பி.மொஹமட் ராபி, 356/7, கண்டி வீதி, பாலையூற்று, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
xvi, 192 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41708-0-3.
இந்நூலில் பாடசாலை ஆசிரியரான மூதூர் மொஹமட் ராபி இயற்றிய சம்பள நிலுவை, பலிக்கடா, கரையொதுங்கும் முதலைகள், சுற்றுலா, இலுப்பம்பூக்கள், விழியில் வடியும் உதிரம், என்ன விலை அழகே, சிலந்திக் கூடுகள், நான் எனும் நீ, மியுறியன் க்ரேட்டர், மணல் தீவுகள், எனது பெயர் இன்சாப், வேடிக்கை மனிதர்கள், கரைகள் தேடும் ஓடங்கள், ஒரு கதையின் கதை ஆகிய 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மூதூர் மொஹமட் ராபி, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக ஈழத்தின் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருபவர். தனது முதலாவது சிறுகதையை ‘நிழலாக சில நிஜங்கள்’ என்ற தலைப்பில் எழுதி, உள்ளூர் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த ‘முத்தொளி’ சஞ்சிகையில் 1991இல் இடம்பெறச் செய்திருந்தார். ‘தினக்குரல்’ பத்திரிகையின் 26.12.2010இல் வெளிவந்த ‘பலிக்கடா’ என்ற விஞ்ஞானப் புனைகதை இவரை தேசிய பத்திரிகைகளில் அறிமுகம் செய்திருந்தது. தொடர்ந்து தினக்குரல், மீள்பார்வை, மல்லிகை, ஜீவநதி போன்ற இதழ்களில் எழுதிவந்துள்ள இவர் இதுவரை 40இற்கும் அதிகமான புனைகதைகளை பிரசுரித்துள்ளார். இவரது முதலாவது நூல் இதுவாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122078).