17640 உதாரணம் எனது பெண்மை.

இராஜினிதேவி சிவலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 92 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-32-0.

ஈழத்தின் இலக்கிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளின் வார மஞ்சரிகளிலும் இராஜினிதேவி சிவலிங்கத்தின் சிறுகதைகள் கட்டுரைகள் என்பன அடிக்கடி வெளியாகி வருகின்றன. இவரது சிறுகதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை வலியுறுத்துவனவாக உள்ளன. சமூக ஊடாட்டத்தினூடு வெளிப்படும் மனித நடத்தைகளை அவற்றின் பலங்களுடனும் பலவீனங்களுடனும் இவரது சிறுகதைகள் பதிவுசெய்கின்றன. அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுப்பு, பல்வேறு பெண்களின் பல்வேறுபட்ட சமுதாய வாழ்வியற் கோலத்தின் அடிப்படையில் எழுந்த சிறுகதைகள் பலவற்றைக்கொண்டுள்ளது. இத்தொகுப்பில் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோர், பெண் பார்த்தல், திருமண வாழ்வு, காதல், மரணங்கள், ஆசிரியர்கள், அரசியல், சாதியம், சீதனம், போதை வஸ்து, வேலைக்குச் செல்லும் பெற்றோர், இடப்பெயர்வு, சகோதர பாசம், நாய்களும் மனித மனமும், யுத்தத்தின் எச்சங்கள் எனப் பல்வேறுபட்ட சமூக விடயங்களைக் கதைக் களங்களாகக் கொண்டமைந்துள்ளது. அலாரம் வைத்து எழும்புதல், கோயில் மணி, உறவு நிலைகள், சமையல், மனித மனங்களின் ஊசலாட்டங்கள் என சமூக வழக்காறுகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். துடுப்பிழந்த படகு, அமுத சாகரம், இமயங்கள் சாய்வதில்லை, மாற்றம், மாயா, நினைவகலா நெஞ்சம், சிகரம் தொடும் சிட்டுகள், திசை மாறும் பறவைகள், துடிப்பின் எல்லை, இதுவும் கடந்த போகும், உன் கண்ணில் நீர் வழிந்தால், உதாரணம் எனது பெண்மை, விலாங்கு மீன்கள், விதி வரைந்த பாதையிலே ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 145ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்