ஜே.வஹாப்தீன். ஒலுவில் 3: தமிழ்ச் சங்கம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 64, பழைய தபாலக வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (அக்கரைப்பற்று: பெஸ்ட் பிரின்ட்).
viii, 166 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52409-2-5.
முனாஸ் என்ற மாற்றுத் திறனாளி ஒருவரை முக்கிய பாத்திரமாக வைத்துப் புனையப்பெற்ற நாவல் இது. மாற்றுத்திறனாளிகளை கேலிப்பொருளாக்கும் ஆதம்போடி என்ற தென்னந் தோட்ட உரிமையாளர் மற்றொரு பாத்திரம். மூன்றாவது பாத்திரம் கிராமத்தின் பேரழகி அஸீஸா. இம்மூவரையும் சுற்றி இந்நாவல் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்லப்படுகின்றது. முனாஸையும் போடியாரையும் எவ்வாறு நாவலாசிரியர் மறக்க முடியாத விதத்தில் இணைக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. காணும்போதெல்லாம் முனாஸை வதைக்கின்ற ஆதம்போடியார் நாவலின் முடிவில் அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறார்;. ஒலுவிலில் ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த வாய்மொழிப் புலவரான புதுலெவ்வைப் புலவர் பற்றியும் சில தகவல்களை இந்நாவல் பதிவு செய்கின்றது. நாவலின் இடைநடுவே வந்துசெல்லும் ஹனீபாவின் மகன் அஸ்கியின் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய செய்தியையும் சமூகத்துக்கு வழங்கிச்செல்கிறார். ஒலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமமாகும். ஒலுவிலைச் சேர்ந்த ஜே. வஹாப்தீன் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். இவர் ஒலுவில் அக்ஃஅல் ஹம்றா மகாவித்தியாலய ஆசிரியரும், இலங்கை வானொலியின் பிறை எப்.எம். பகுதிநேர வானொலி அறிவிப்பாளருமாவார். குலைமுறிசல் நாவலுக்காக ‘பேயாவே’ விருதினைப் பெற்றவர் இவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 121257).