கர்சினி கணேசு. யாழ்ப்பாணம்: கலாபூஷணம் க.ப.சின்னராசா ஞாபகார்த்த குழு, சுன்னாகம், இணை வெளியீடு, ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 92 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-99989-0-2.
மிருதங்க வித்துவான் அமரர் க.ப.சின்னராசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், மிருதங்க பக்கவாத்தியக் கலைஞராக அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்பவற்றுடன் பரதநாட்டிய வளர்ச்சிக்கு க.ப.சின்னராசா அவர்கள் ஆற்றிய பங்களிப்புக் குறித்ததாக இவ்வாய்வு அமைகின்றது. இவ்வாய்வின் மூலம் க.ப.சின்னராசாவின் கலைப் படைப்புக்கள் பற்றிய ஆழமான வாசிப்பை நிகழ்த்துவதோடு ஈழத்துக் கலையுலகில் இவருக்கான இடத்தை மதிப்பீடு செய்வதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. ஈழத்து மிருதங்க பக்கவாத்தியக் கலைஞர் வரிசையில் மிக முக்கியமான ஒரு மூத்த கலைஞரான க.ப சின்னராசா அவர்களின் கலைப்பணி குறித்து ஆய்வாளர்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கவில்லை. இவ் வகையில் இவர் தொடர்பான ஒரு புலமை நிலைப்பட்ட ஆய்வு முக்கியமாக உணரப்படுகின்றது. க.ப.சின்னராசா அவர்கள் மிருதங்கத்தின் ஊடாக பரதநாட்டியத்திற்கு ஆற்றிய பணிகள் முதன்மையானதும் தனித்துவமானதுமாகும் என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். அமரர் சின்னராசா அவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு வினாக்கொத்து மூலமாகவும், செவ்வி காணுதல்; மூலமாகவும் பெறப்படுகின்ற கள ஆய்வுமுறை இவ் ஆய்வின் முறையியலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆற்றுகைக்குரிய அணிசேர் இசைக்கருவிகளுள் மிருதங்கம் என்ற தலைப்பில் ஆய்வு செய்வதற்காக விபரண ஆய்வு முறை பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவரது படைப்பாற்றலை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய பகுப்பாய்வு அணுகுமுறைகளும் கையாளப்படுகின்றன. இவ்வாய்வாளர் கர்சினி கணேசு யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கணேசு-வசந்தகுமாரி தம்பதிகளின் மகளாக 1993இல் பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் நடனத்துறையில் பயின்று நுண்கலைமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர்.