ந.நாராயணசாஸ்திரி (மூலம்), இ.சி.இரகுநாதையர் (பதிப்பாசிரியர்). கொக்குவில்: சோதிட பரிபாலன மடம், 3வது பதிப்பு, பிரமாதி வருடம், ஐப்பசி 1940, 1வது பதிப்பு, நந்தன வருடம், 1893, 2வது பதிப்பு, ரூத்ரோத்காரி ஆண்டு, 1924. (கொக்குவில்: அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 117 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
சித்தாந்தஸ்கந்தத்தை விரித்து விளக்கி எழுதப்பட்டுள்ள நூல்கள் சித்தாந்தங்கள் எனப்படும். இவை பதினெட்டு உள்ளன. இவற்றுள் வட இந்தியாவில் சூரியசித்தாந்தமும், தென்னிந்தியாவில் (தமிழ்நாடு, மலையாளம்) ஆரியபடசித்தாந்தமுமே இன்றுவரை ஆன்றோர்களால் அனுபவத்தில் ஆளப்படுகின்றன. ஆரியபடசித்தாந்தத்தை ஆதாரமாகக்கொண்டு நுட்பமாகச் செய்யப்பட்ட கணித நூல்கள் வாக்கியகரணம், கரணப் பிரகாசம், பரகிதம் என்பனவாகும். இவற்றுள் வாக்கியகரணம் என்னும் கணிதநூல் வரருசி முனிவரால் வடமொழியில் பாடப்பட்டுள்ளது. இது பஞ்சாங்க கணனம், ஸ்புடகணனம், சாரகணனம், கிரகணகணனம், என நான்கு பிரிவுகளையுடையதாகும். இவ்வடமொழி வாக்கிய கணிதத்தை தமிழில் 180 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அராலிமேற்கில் வசித்த கோ.இரகுநாத சாஸ்திரிகளின் புத்திரர் நடராஜ சாஸ்திரி அவர்களின் மகன் நாராயண சாஸ்திரி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கணித சிந்தாமணி என்ற நூலை எழுதியிருந்தார். இக்கணித சிந்தாமணியிலுள்ள ஸ்புடகணனமாகிய பகுதியே பரகிதம் என்னும் பெயருடன் இந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் முதலிரு பதிப்பிலும் ஆக்கியோன் பெயர் விசுவநாத சாஸ்திரிகள் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்மையில் விஸ்வநாத சாஸ்திரிகளின் தந்தையாரே அந்நூல்களின் ஆசிரியர் ந.நாராயணசாஸ்திரி அவர்களாவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33623).