அனார் (இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 60005: மணி ஓப்செட்).
62 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89945-97-8.
ஈழத்துக் கவிஞர் அனாரின் மூன்றாம் தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகளில் வெளியிடப்பட்ட அவருடைய கவிதை முகம் இதில் வேறு தோற்றம் கொள்கிறது. முந்தைய கவிதைகளில் பெண்ணிருப்பின் உணர்வுநிலையில் உரையாடிய கவிஞர் இத்தொகுப்பின் கவிதைகளில் பெண்ணுடல் பூண்ட இயற்கை நான் எனப் பிரகடனம் செய்கிறார். தொகுப்பின் கவிதை வரிகளுக்கிடையில் பெண் நீராகிறாள். ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக மாறுகிறாள். பெண் நிலமாகிறாள். மலையாக, வயல்வெளியாக உருவங்கொள்கிறாள். பெண் காற்றாகிறாள் மூச்சாக, ஊழிப் புயலாக வடிவெடுக்கிறாள். பெண் ஒளியாகிறாள். அனலாகிறாள். இயற்கை பெண்ணுடலாகிறது. இயற்கை பெண்ணாகிறது. கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்ட அனாரின் முன்னைய நூலான ஓவியம் வரையாத தூரிகை என்ற கவிதைத் தொகுதிக்கு 2005இல் இலங்கை அரசின் சாகித்திய விருதும், வட-கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய விருதும் கிடைத்தன.