இரத்தினசபாபதி பிரேம்குமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 80 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-390-7.
இந்நூல் ஐரோப்பாவில் அழகியல் சிந்தனை வளர்ச்சி எவ்வாறுநடைபெற்றுள்ளது என்பதை மூன்று பிரதான காலங்களான கிரேக்ககாலம், மத்திய காலம், நவீன காலம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எடுத்துரைக்கின்றது. கிரேக்க நாகரிகத்தில் அழகியலின் எல்லைகளையும் பரிமாணங்களையும் பிளேட்டோவும் அரிஸ்டோட்டிலும் எடுத்துரைத்து மதிப்பீடு செய்ய முயன்றனர். மத்திய காலத்தில் அகஸ்டினும் அக்கவினாசும் இறையியலுடன் இணைந்த வகையில் அழகியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் விளக்கத்தினையும் தரமுயன்றனர். நவீனகால ஹட்சன் மற்றும் ஹியூம் போன்றவர்கள் அழகியலை ஏனைய துறைகளிலிருந்து பிரித்தெடுத்து அழகியல் கூற்றுக்களையும் மதிப்பீடுகளையும் பகுப்பாய்வுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஜெர்மானிய மெய்ப்பொருளியலாளர்கள் அழகியல் சம்பந்தமான பகுப்பாய்வினை மேற்கொண்டனர். இவர்களுள் கான்டின் பங்களிப்பு இன்றியமையாதது. அவரைத் தொடர்ந்து ஹெகல் அழகியலை வரலாற்றுரீதியாக நோக்கியதுடன் கலை சம்பந்தமான வகையீடுகளையும் உருவாக்கினார். ஜெர்மானிய பாரம்பரியத்தில் வரும் மற்றுமோர் அறிஞரான நீட்சே அழகியலை புதிய பரிமாணத்துக்கு இட்டுச்சென்றார். இவ்வாறு அழகியல்சார்ந்து கோட்பாடுகளை முன்வைத்த முக்கிய ஒன்பது மெய்யியலாளர்களை அடிப்படையாகக்கொண்டு அழகியல் தொடர்பான சிந்தனைகளை முன்வைக்கும் இந்நூல் கலை, இலக்கியம் மற்றும் சமூக விஞ்ஞானங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கும் கலை மற்றும் அழகியல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் பெரிதும் பயன்படும். நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறையில் சிறப்புப் பட்டத்தினைப் பெற்றவர். அப்பல்கலைக்கழகத்தின் வருகைநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.