வி.சிவசாமி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-298-6.
இந்நூல் இனரீதியாகவன்றி மொழி, பண்பாட்டு ரீதியிலே ஆரியர் என்போர் யார் என்பதை ஆராய்கின்றது. அவர்களின் மொழிகள், ஆதி வரலாறு, புலப்பெயர்வு, இருப்பிடங்கள் பற்றிச் சுருக்கமாகவும், இந்தியாவுக்கு அவர்களின் வருகையும், அங்கு வாழ்ந்தவர்களோடு சேர்ந்து உருவாக்கிய வேதகால நாகரிகம் பற்றிச் சற்று விரிவாகவும் புராதன வரலாறு, தொல்லியல், மொழிநூல், ஒப்பியல் மொழி நூல், சமயம் முதலியவற்றிலே துறைபோகிய ஆய்வாளர்களின் கருத்துக்களைப் பெருமளவில் தழுவியும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இவ்விடயம்பற்றித் தமிழிலே எழுதப்பட்டுள்ள முக்கியமான நூல்களுள் இதுவும் ஒன்று. இதில் ஆரியர், ஆதி இருப்பிடம், இந்தோ-ஆரிய, இந்தோ-இரானியத் தொடர்புகள், இந்தோ-ஐரோப்பிய மொழிகள், ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா ஐரோப்பாவிலா?, ஆரியரின் புலப்பெயர்ச்சிகளும் காலமும், இந்தியாவில் ஆரியர், வேத இலக்கியம், வேதங்களின் காலமும் வரலாற்றியல்பும், வேத காலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும் ஜனக் குழுக்களும், வேதகால அரசியல் நிலை, வேதகாலச் சமய தத்துவ நிலை, வேதகாலச் சமூக நிலை, வேதகாலப் பொருளாதார நிலை, பிற்காலம் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் இலக்கிய கலாநிதி வி.சிவசாமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைத் தலைவராகப் பல வருடங்கள் பணியாற்றியவர். சம்ஸ்கிருதம், வரலாறு, மட்டுமன்றித் தொல்லியல், இந்து நாகரீகம், நுண்கலைகள் முதலியவற்றிலும் ஈடுபாடுகொண்டு எழுதிவருபவர். திராவிடர் ஆதி வரலாறும் பண்பாடும் என்ற நூலைத் தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது.