வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 345 பக்கம், விலை: ரூபா 975., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-323-5.
இந்நூல் கிழக்கிலங்கை மக்களின் தனித்துவமான வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சடங்குகள் பற்றியதாக அமைந்துள்ளது. கிழக்கிலங்கையின் பல பிரதேசங்களிலும் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இவை பிரதேசத் தனித்துவங்கள் சிலவற்றைக்கொண்டு விளங்கியபோதும், வழிபாட்டை நிகழ்த்துவதன் நோக்கம், வழிபடும் தெய்வங்கள், மக்களின் நம்பிக்கை, சமூக செயற்பாட்டில் சடங்குகள் பெறும் முக்கியத்துவம் என்னும் விடயங்களில் ஒத்த போக்கே காணப்படுகின்றன. மேலும் இச்சடங்குகள் கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியல் அம்சங்கள் பலவற்றுடனும் தொடர்புடையனவாக விளங்குகின்றன. இந்நிலையில் கிழக்கிலங்கை மக்களின் சமூகப் பின்புலத்தினூடாக சடங்குகளின் கலை, அழகியல் கூறுகள் பற்றிய ஒரு குவிந்த பார்வையை இவ்வாய்வு நூல் தருவதுடன் கிழக்கிலங்கைச் சமூகம் பற்றியும் அச்சமூகத்தின் சமயம், கலை, அழகியல் செயற்பாடுகள் பற்றியும் தெளிவை வாசகர்களுக்கு வழங்குகின்றது. ஆறு இயல்களில் அமைந்துள்ள இவ்வாய்வு இயற்கைச் சமயமும் அதன் கட்டமைப்பும் கலையுடன் அதற்குள்ள தொடர்பும்/கிழக்கிலங்கைச் சடங்குகள்/சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்களினதும் வழிபாட்டிடத்தினதும் கலைக்கூறுகள்/சடங்கு நிகழ்த்துகையில் கலைக்கூறுகள்/சடங்ககளில் அழகியல் கூறுகள்/இலங்கைத் தமிழரின் ஆரம்பகாலக் கலைகளின் கூறுகளைத் தாங்கிய சடங்குகளின் ஒரு பகுதியாகக் கிழக்கிலங்கைச் சடங்குகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. வடிவேல் இன்பமோகன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப்பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.