வசந்தி தயாபரன். கொழும்பு 6: வசந்தி தயாபரன், 40, லில்லி அவென்யூ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 103V, விவேகானந்த மேடு).
xiii, 94 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-54233-0-4.
வங்கியாளராகப் பணியாற்றும் வசந்தி தயாபரன், சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டவர். தனது மற்றொரு பரிமாணமான புனைகதை இலக்கிய ஆளுமையை இத்தொகுப்பின் வழியாக உறுதிசெய்துள்ளார். 2003 முதல் 2011 வரையுள்ள காலகட்டத்தில் மல்லிகை, ஞானம், தினக்குரல் முதலான ஊடகங்களில் வசந்தி எழுதிய புதியதோர் உலகு செய்வோம், உயிர்க்கூடு, பாத்திரமறிந்து, கனவு மெய்ப்பட, பார்வை, கூர்ப்பு, காலமாம் வனம், புதிய முகம், நாதியற்று, புகலிடம் பிறிதொன்றில்லை, எந்தையும் தாயும், காலம் தொலைத்த கனவு ஆகிய 12 கதைகளைக் கொண்ட தொகுப்பு இதுவாகும். போரினால் பாழ்வெளியாகிய தாய்நிலங்களின் தவிப்பு காலமாம் வனம் என்ற தலைப்புக் கதை. தாயை வெளிநாட்டில் தொலைத்துவிட்டு அன்ரியிடம் வதைபட்டு மனநோயாளியாகும் சிறுவனின் கதை எந்தையும் தாயும். புலம்பெயர் நாட்டில் கணவனால் ஏமாற்றப்பட்ட அபலைப்பெண்ணின் கதை புதிய முகம். புலம்பெயர் வாழ்வில் பழைய வாழ்வினை மறந்த பெண்ணின் கதை பார்வை. மனச்சிதைவுக்குள்ளான இளைஞர்கள் பற்றிய கதை உயிர்க்கூடு. பிள்ளைகள் புலம்பெயரத் தாம் அநாதைகளாகிப்போன பெற்றோரைப் பற்றிப் பேசும் கதை புகலிடம் பிறிதொன்றில்லை. வெளிநாட்டு மோகத்தால் நிலைமாறும் இளைஞர்களைப் பிரதிபலிக்கின்றது கூர்ப்பு. போர் தந்த அவலத்தால் நிலைதவறிப்போன பெண்ணின் வாழ்வைச் சித்திரிப்பது புதியதோர் உலகு செய்வோம். போர் ஏற்படுத்திய அவலத்தால் நிலமும் மக்களும் அந்நியமாகிப்போனமையை காலம் தொலைத்த கனவு வெளிப்படுத்துகின்றது. இப்படியாக அனைத்துக் கதைகளும் நமது சமூகத்தின் சமகாலப் பாதிப்புகளைப் பேசுபவையாக அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 228124).