சந்திரா இரவீந்திரன். நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 60005: மணி ஓப்செட்).
119 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-66-4.
துயரத்தின் வடிவம் ஒப்பாரியாகத்தான் இருக்கவேண்டியதில்லை. மனதில் உறைந்துபோன கண்ணீரின் பாறைகளாகவும் இருக்கக்கூடும். சந்திராவின் சிறுகதைகள் சுமந்துவரும் துயரம் இரண்டாவது வடிவத்தைச் சார்ந்தது. இத்தொகுப்பில் பால்யம், தரிசு நிலத்து அரும்பு, அவர்கள் இல்லாத தேசம், என் மண்ணும் என் வீடும் என் உறவும், முறியாத பனை, நெய்தல் நினைவுகள், வல்லை வெளிதாண்டி, யாசகம், காற்று, கண்ணில் தெரியும் ஓவியங்கள் ஆகிய பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன. உமா வரதராஜனின் “துயரத்தின் நெடும்பயணம்’’ என்ற நீண்ட ஆழமான முன்னுரையுடன் கூடியது. வடமராட்சி பருத்தித்துறையில் மேலைப் புலொலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரகுமாரி. யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் உயர்கல்விகற்று 1991 வரை யாழ். அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவரது முதல் கதை ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற தலைப்பில், சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கையில் பிரசுரமாகியது. 1988இல் நிழல்கள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர். 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.