செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (சென்னை: சிவம்ஸ்).
223 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ.
உடலுழைப்பு முதன்மைபெற்ற கிராமத்தில் வாழ்ந்து வளர்ந்த வேல்முருகன் கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் பெற்று இலண்டனில் உயர்கல்வி கற்றுத் திரும்புகின்றான். கிராமத்து ஆசிரிய நண்பன் ஆனந்தனுடன் மேல்நாட்டில் வளர்ந்துவரும் விஞ்ஞானம், தொழில்நுட்ப மூளை உழைப்புப் பற்றியெல்லாம் விவாதிக்கிறான்.அவனுக்கான தாயாரின் திருமண முயற்சிகளை ஆனந்தன் கூறிய வேளை, தான் இலண்டனிலிருந்த காலத்தில் இலண்டனுக்கு வந்திருந்த சுவீடிஷ் பெண்ணுக்கு விசா பெற்றுக்கொள்வதற்காக அவளைப் பதிவுத் திருமணம் மூலம் உதவியதைக் கூறித் திகைப்படையச் செய்கிறான். பின்னர் வேல்முருகன் அந்த சுவீடிஷ் பெண்ணை விட்டு நீங்கி, குழந்தையுடன் இலங்கை திரும்பி அவளைத் தமிழ்ப் பெண்ணாக வளர்க்க முயல்கிறான். தனிவீடும், ஆயாவும் தேடிய அவன் அப்பணிக்காகவே சாதாரண இளம்பெண் தேவயானியை மணக்கிறான். “தாயாகவிருந்து குழந்தை வளர்ப்பதற்கே உன்னை மணந்தேன்-நீ குழந்தை பெற எண்ணாதே” என முதல்நாளே தேவியை எச்சரிக்கிறான். அவள் அதிர்கிறாள். பின்னர் ஆபிரிக்க நாட்டிற்கு வேல்முருகன் பணியாற்றச் சென்ற காலத்தில் தேவி- எதிர்பாராது கர்ப்பமடைகிறாள். முருகன் வெறுத்தபோதும், தேவியின் உறுதிக்குக் கீழ்ப்படிகின்றான். பின்னர் பிரிட்டனில் அவன் வேலை பெறுகின்றான். மகப்பேற்று வேளை மீண்டும் இருவருக்கும் முரண்பாடு முற்றுகின்றது. கிழக்கும் மேற்கும் சிந்தனைவழியில் ஒவ்வாமை மிக்கதென்பதை நாவல் பாத்திரவார்ப்புகளின் வழியாகத் தெரியவைக்கின்றது.