வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). சென்னை 600078: சோழன் படைப்பகம், எண் 10, 6ஆவது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்).
152 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.
மன்னார் மாவட்டத்தில் அடம்பன் கிராமத்தில் 1974இல் பிறந்தவர் வேலு சந்திரகலா.1991இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதி யுத்தம் வரை போராளியாகச் செயற்பட்டவர். 1993இல் வெடிவிபத்தில் தனது ஒற்றைக் கண்ணையும் ஒற்றைக் கையையும் இழந்தவர். 1997 முதல் எழுத்துத் துறையில் பிரவேசித்தவர். 1999 முதல் 2004 வரை புலிகளின் குரல் வானொலியில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டவர். பெண்புலிகளின் சுதந்திரப் பறவைகள் பத்திரிகையிலும் பணியாற்றியவர். இவரது இப்படிக்கு அக்கா என்ற கவிதைத் தொகுதி கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இறுதி நாட்களும் எனது பயணமும் என்ற முள்ளிவாய்க்கால் யுத்தகாலப் பயணக்கட்டுரை இணையங்களில் பரபரப்புடன் வாசிக்கப்பட்டது. அது பின்னர் ஈழப்போரின் இறுதி நாட்கள் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. வெற்றிச் செல்வி தற்போது மாற்றாற்றல் உடையவர்களுக்காகச் செயலாற்றத் தொடங்கியிருக்கும் மன்னார் மாவட்ட தொண்டு நிறுவன அமைப்பொன்றில் பகுதிநேர கள உத்தியோகத்தராக செயற்பட்டு வருகின்றார். நூலுருவில் வெளியாகும் வெற்றிச்செல்வியின் முதலாவது நாவல் இது. முள்ளிவாய்க்கால் அவலத்தையடுத்து இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் உயிரே உயிரே என்ற தலைப்பில் இவர் எழுதிய நாவல் தமிழகத்தின் தினமணி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அந்த நாவலே இதுவாகும்.