ப.சிவானந்த சர்மா (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: பிரம்மஸ்ரீ தி.நடனசபாபதி சர்மா குடும்பத்தினர் வெளியீடு, 8, Allee Alfred Jarry, 31120 Portet Sur Garonne, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
96 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா) அவர்கள் தொகுத்தளித்துள்ள இந்நூல் தி.நடனசபாபதி சர்மாவின் வாழ்க்கைச் சிறப்புப் பற்றிய நயப்புரைகள், அவருக்குச் சான்றோர் வழங்கிய நயப்புரைகள், மற்றும் பல்துறை ஆக்கங்கள் என்பனவற்றைச் சுமந்து வெளிவந்துள்ளது. தி.நடனசபாபதி சர்மா நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் அரச சேவையில் பணியாற்றி இளைப்பாறியவர். பின்னாளில் பிரான்சில் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து வாழ்பவர். இவரது எண்பதாவது அகவைப் பூர்த்தியை முன்னனிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்க்கைக் குறிப்பு, வாழ்த்துரைகளுடன், அவர் எழுதிய நூற்பட்டியலும் தரப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி, ஈழகேசரி மற்றும் அக்காலப் பத்திரிகைகளில் வெளியான இவரது சிறுகதைகளான வாழ்வு, பிராயச்சித்தம், தரிசனம், சிதைந்த வாக்கு ஆகிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பார்ப்பனர்கள் ஆற்றிய பங்கு, சம்ஸ்கிருதம் ஒரு தேவபாஷை, யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வி, ஆலயங்களில் வடமொழியில் வழிபாடு, அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்கள், அமரசிம்மன், மானிடரின் தெய்வவழிபாடு, நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் சாம்பசதாசிவக் குருக்களின் வரலாறு, முறிகண்டிப் பிள்ளையார் கோவில் அப்பெயரைப் பெற்ற வரலாறு எனப் பல்வேறு சுவையான விடயங்களைத் தாங்கிய நடனசபாபதி சர்மாவின் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதியான நான்காவது இயலான தில்லானாவில் காஞ்சிமாமுனிவர் போற்றும் வைதிக தர்மம் பற்றிய ப.கோபாலகிருஷ்ண ஐயர் எழுதிய கட்டுரையும், மூர்த்தி-தலம்-தீர்த்தம் பற்றிய மற்றொரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.