ஜே.பி.லூயிஸ் (ஆங்கில மூலம்), தமிழாக்கக்குழு-வன்னி. முள்ளியவளை: வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை, வற்றாப்பளை, 2வது (தமிழ்) பதிப்பு, 2012, 1வது (ஆங்கிலமூலப்) பதிப்பு, 1895. ( கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, Peoples Park).
lviii, 454 பக்கம், வரைபடம், அட்டவணைகள், விலை: ரூபா 1200., அளவு: 24×15.5 சமீ., ISBN: 978-955-685-005-5.
ஜே.பி.லூயிஸ் அவர்கள் 1889 ஜுலை 15 தொடக்கம் டிசம்பர் 14 வரை உதவி அரசாங்க அதிகாரியாக வன்னியில் பணிபுரிந்தவர். Manual of the Vanni Districts (Vavuniya and Mullaittivu) of the Northern Province, Ceylon என்ற தலைப்பில் இவரால் எழுதப்பெற்று கொழும்பு, H.C.Cottle, Acting Government Printer என்ற அச்சகத்தில் 1895இல் அச்சிட்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இதுவாகும். இந்நூலில் தரைத்தோற்ற விவரணம்-பௌதிக அம்சங்கள், வரலாற்றுச் சுருக்கம், நிர்வாகம், குடித்தொகை, பிரிவுகளும் கிராமங்களும், இனம்-சாதி-தொழில்-சமயம், வன்னியில் சிங்களவர், வருமானம்- பொது, வருமானம்- உப்பு, வருமானம்- சுங்கம், வருமானம்- மரம், வருமானம்- நெல்லும் உலர் தானியங்களும், நிலம் (காணி) உடைமை உரிமை, விவசாயம்- நெல் வேளாண்மை, விவசாயம்- நீர்ப்பாசனம், விவசாயம்- உலர் தானியப் பயிற்செய்கை, நானாவித விவசாயம், மீன்பிடி தளங்கள், உழைப்பு-வேதனம், கால்நடை, வீதிகள், தபால் சேவை, நிறுவைகளும் அளவைகளும், விலை, குற்றமும் சட்ட நடவடிக்கைகளும், ஆரோக்கியமும் சுகாதாரமும், மக்களின் சமூக நிலை, காலநிலை, தாவரங்கள், விலங்கினங்கள், தொல்பொருளியல், நானாவித தகவல்கள், அபிவிருத்திக்கான திட்டங்கள் ஆகிய தலைப்புகளின்கீழ் விடயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டின் வன்னிப்பிரதேச நிர்வாகத்திற்கும், நீதி பரிபாலனத்திற்கும் பொறுப்பாக இருந்த ஆங்கிலேயர் தமது நாட்குறிப்புகளில் வன்னியைப்பற்றிக் குறித்து வைத்திருந்தார்கள். இதில் இப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகள், தொழில்கள், பழக்க வழக்கங்கள், சாதி, சமய வேறுபாடுகள், தொல்பொருட்கள், அரசியல் முதலியவற்றை அவதானித்து தமது நாட்குறிப்புகளில் பதிந்து வைத்திருந்தனர். லூயிஸ் வன்னி மாவட்டக் கைநூலை எழுதுவதற்கு இவை பெரிதும் பயன்பட்டுள்ளன. இந்நூலின் மொழிபெயர்ப்புக்குழுவின் காப்பாளராக முல்லை மணி வே.சுப்பிரமணியமும், இணைச் செயலாளர்களாக அகளங்கன், புவனா ஐயம்பிள்ளை ஆகியோரும், தலைவராக கே. ஐயம்பிள்ளையும், தனாதிகாரியாக எம்.விவேகானந்தனும் பணியாற்றியுள்ளனர்.