க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xvi,512 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-9233-28-2.
1992ஆம் ஆண்டுமுதல் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், வருடாந்த இந்து சமய தமிழிலக்கிய ஆய்வரங்குகளை நடத்திவருகின்றது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இந்து சமயமும் அவைதிக நெறிகளும் என்ற தலைப்பில் இவ்வாய்வரங்கு இடம்பெற்றது. இவ்வாய்வரங்கின்போது சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். சமய மரபுகள் என்ற முதற் பிரிவில், தென்னிலங்கையில் இந்து சமயம்: கி.பி.1300-1600 (சி.பத்மநாதன்), தமிழகத்தில் ஆசிவகம் அன்றும் இன்றும் (சொ.சாந்தலிங்கம்), தென் தமிழ் நாட்டில் சமணசமயம் (வெ.வேதாசலம்), இந்து சமயமும் பௌத்தமும்: பரஸ்பர தொடர்புகள் (ந.வாமன்), பௌத்த மரபில் பத்தினி வழிபாடு (கவிதா சிவாகரன்), பண்டைத் தமிழகத்தில் கொற்றவை (சு.துஷ்யந்த்), பண்டைய தமிழகத்தில் திருமால் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), இலங்கையில் இந்து சமயமும் பௌத்தமும்: சோழர் காலம் வரை (சுகந்தினி சிறிமுரளிதரன்), பண்டைய தமிழகத்தில் சிறு தெய்வங்களும் தேவர்களும் (ந.சுபராஜ்), இலங்கையில் இந்து-பௌத்த சமய மரபுகளில் சிறுதெய்வ வழிபாடுகள்- ஓர் ஒப்பியல் நோக்கு (வ.குணபாலசிங்கம்), சிங்கள தூதுக் காவியங்களில் இந்து சமயம் (தம்மிக்க ஜயசிங்க), இந்து மரபில் கண்ணகி வழிபாடு (சாந்தி கேசவன்), ஈரின இணைப்புத் தலமாக முன்னேஸ்வரம் (மல்லிகாதேவி நாராயணன்)ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சிந்தனை மரபுகள் என்ற இரண்டாவது பிரிவில், இந்திய சமயங்களில் வைதிக சிந்தனைகள் (வி.சிவசாமி), இந்து பௌத்த சமயங்களின் அறக்கோட்பாடுகள் (வசந்தா வைத்தியநாதன்), அத்வைதமும் பௌத்தமும் (நா.ஞானகுமாரன்), சங்கரரது அத்வைதமும் மாத்தியாமிக பௌத்தமும் (கிருஷ்ணவேணி நோபேட்), தம்மபதம் காட்டும் பண்பாட்டுச் சிந்தனைகள் (விக்னேஸ்வரி பவநேசன்), நீலகேசியில் நியதிவாதம் (ச.முகுந்தன்), பண்டைய தமிழகப் பட்டினங்களில் நிலவிய பன்முகப் பண்பாட்டுச் சூழல் (க.இரகுபரன்), பெரியபுராணத்தில் சைவமும் பௌத்தமும்: சாக்கியநாயனார் புராணத்தை முன்வைத்து ஓர் ஆய்வு (ஸ்ரீ பிரசாந்தன்), இந்திய அரசியல் வரலாற்றில் பௌத்தத்தின் செல்வாக்கு (சொ.சாந்தலிங்கம்), சிலப்பதிகாரத்தில் சமண சமயச் சிந்தனைகள் (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பிரிவான கலைமரபுகளின் கீழ் தமிழகத்தில் பௌத்தப் படிமங்கள், ஓவியக் கலையும் பௌத்தமும்(வெ.வேதாசலம்), வேங்கி பகுதியில் பௌத்த சிற்பக்கலை (கு.சேதுராமன்), இலங்கை பௌத்த சிற்பங்களில் தென்னிந்தியச் செல்வாக்கு (சு.இராஜகோபால்), இந்துக் கலையில் பௌத்தத்தின் தாக்கம் (கு.சேதுராமன்), இலங்கை பௌத்தக் கட்டடக் கலை மரபில் இந்துக் கட்டடக் கலையின் செல்வாக்கு (சு.இராஜகோபால்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.