சின்னத்தம்பிப் புலவர் (மூலம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xxii, 353 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ.
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நல்லூர் சின்னத்தம்பிப் புலவரின் நான்கு நூல்களின் தொகுப்பு இது. ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வில்லவராய முதலியார் என்பவர் தேசவழமைச் சட்டத்தை எழுதும் சபைக்குத் தலைவராக விளங்கியவர். அவரது மகனாரே நல்லூர் சின்னத்தம்பிப் புலவராவார். இவர் ஏறக்குறைய கி.பி.1730ம் ஆண்டளவில் பிறந்து கி.பி.1787ம் ஆண்டுவாக்கில் மறைந்தவர் என்று கருதப்படுகின்றது. தெளிவான வரலாற்றுப் பதிவில்லை. இந்நூலில் புலவரின் மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நான்கு நூல்கள் இடம்பெற்றுள்ளன. மறைசையந்தாதி, வேதாரணியத்தில் எழுந்தருளியுள்ள வேதாரணியேஸ்வரர் மேற் பாடப்பட்ட அந்தாதியாகும். கல்வளை அந்தாதி, கல்வளை விநாயகர் மேற் பாடப்பட்ட யமக அந்தாதியாகும். சுழிபுரம் பறாளை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற பிரபந்தமாக பறாளை விநாயகர் பள்ளு அமைகின்றது. கரவெட்டி என்னும் ஊரில் வாழ்ந்த வேலாயுதபிள்ளை என்னும் பிரபு பற்றிப் பாடப்பெற்ற கோவைப் பிரபந்தமே கரவைவேலன் கோவையாகும்.