.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (தொகுப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆடி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
viii, 156 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20 x 5 சமீ., ISBN: 978-955-4676-47-3.
சபாபதி நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ் மிக்க பெரும்புலவராய், சொல்லாற்றல் மிக்கவராய், சைவத்துக்கும் தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியவராய் அறியப்பெற்றவர். யாழ்ப்பாணத்தில், கோப்பாய் வடக்கில் 1846 ஆம் ஆண்டில் சபாபதி நாவலர் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் சுயம்புநாதப் பிள்ளை. தாயின் பெயர் தெய்வயானை. தொடக்கத்தில் பிரம்மசிறீ ஜெகந்நாதையரிடம் சபாபதிப் பிள்ளை சிலகாலம் பயின்ற பின்னர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடம் தமிழையும், வடமொழியையும் கற்றார். அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தையும் நன்கு கற்றார். ஆறுமுக நாவலரின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் சைவபிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். சிதம்பரத்தில் இருக்கையிலே ‘ஏம சபாநாத மான்மியம்” என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துச் சிதம்பரம் சபாநாத புராணம்” என்னும் பெயரில் 893 செய்யுட்கள் கொண்டதாக எழுதி 1895-ஆம் ஆண்டு வெளியிட்டார். அக்காலத்தில் ஆறுமுக நாவலர் ஒருவர் மட்டுமே ‘நாவலர்” என்னும் பட்டம் பெற்றிருந்தார். திருவாவடுதுறையில் ஒரு பேரவையைக் கூட்டி, இவரை சொற்பொழிவு ஆற்றச் செய்து, அப்பேரவையில் சுப்பிரமணிய தேசிகர், இவருக்கும் ‘நாவலர்” என்னும் சிறப்புப் பெயரை வழங்கினார். வடகோவை சபாபதி நாவலர் வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்திருந்த நான்கு படைப்பாக்கங்கள் இங்கு ஒன்றாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. சமயம் அல்லது ஞானாமிர்தம் (பக்கம் 7-26), சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் (பக்கம் 27-48), பாரத தாற்பரிய சங்கிரகம் (பக்கம் 49-100), ஞானாமிர்தம் (பக்கம் 101-506) ஆகியவையே அந்நான்மணிகளுமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61505).
மேலும் பார்க்க: 12794