வி.கந்தவனம் (மலராசிரியர்), ச.விநாயகமூர்த்தி, சி.நடராசா (உதவி ஆசிரியர்கள்), ந.நவமணி, அ.அருள்மணி (மாணவர் பகுதி ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம், வயாவிளான், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(16), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.
1945 அக்டோபர் 10 ஆம் நாள் வயாவிளான், குரும்பசிட்டி, பலாலி மற்றும் அயல் கிராமங்களிலுள்ள முன்னணிப் பிரமுகர்களின் ஒன்றுகூடலில் வயாவிளான் மத்திய கல்லூரியின் தோற்றம் பற்றிய ஆரம்ப முடிவு எடுக்கப்பட்டது. மயிலிட்டி கிராமசபைத் தலைவராக இருந்த ஈழகேசரி நா. பொன்னையா தலைவராகவும், வழக்கறிஞர் திரு.வீ. இராசநாயகம் செயலாளராகவும், ஆசிரியர் ரீ. சின்னத்துரை பொருளாளராகவும் செயற்குழுவில் அங்கம் பெற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசன் காப்பாளராக நியமிக்கப்பட்டார். 1946 சனவரி 16 புதன்கிழமை அன்று 115 மாணவர்களுடன் நா. பொன்னையாவிற்குச் சொந்தமான மீனாட்சி பண்ணையில் அமைச்சர் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா பாடசாலையைத் திறந்து வைத்தார். மீனாட்சி பண்ணை அப்போது குரும்பசிட்டியில் அமைந் திருந்ததால் குரும்பசிட்டி மத்திய கல்லூரி என ஆரம்பத்தில் பெயரிடப்பட்டது. காலப் போக்கில் அப்பகுதி வயாவிளானுடன் இணைக்கப்பட்டதனால் வயாவிளான் மத்திய கல்லூரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக கே. காராளசிங்கம் நியமிக்கப்பட்டார். இவருடன் மூன்று ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் இப்பாடசாலை அரசாங்கத்தினால் மாதிரிப் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டது. பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியான மாணவர் விடுதிகளும் அமைக்கப்பட்டன. 1978 ஆம் ஆண்டளவில் திரைஅரங்கு மற்றும் நாடக வகுப்புக்களும் உயர்தர மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. ஈழப்போர் காரணமாக 1990 ஆம் ஆண்டில் கட்டாய இடப்பெயர்வு நடந்தது. 1990 முதல் 1991 வரை புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் பின்னர் உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் இயங்கி வந்தது. 1995 ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் 1996 முதல் உரும்பிராயில் உள்ள தனியார் காணி ஒன்றில் 12 பரப்புக் காணியில் 1352 மாணவர்களுடன் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. 2010 செப்டம்பர் 28 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாடசாலை விடுவிக்கப்பட்டிருந்தது. 2010 அக்டோபர் 11 இல் தரம் 10, க.பொ.த சாதாரண தரம், உயர்தர வகுப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் 450 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் மத்திய கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் 20 ஆண்டுகளின் பின்னர் 2014 அக்டோபர் 11 இல் மீள ஆரம்பிக்கப்பட்டது. 240 பரப்புக் காணியைக் கொண்ட வயாவிளான் மத்திய கல்லூரி யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிக பரப்பளவைக் கொண்டதாகவும் பெரிய விளையாட்டுத் திடலைக் கொண்ட பாடசாலையாகவும் திகழ்கிறது. இப்பாடசாலையின் வெள்ளிவிழா 15.9.1972 அன்று கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். ஆசியுரை, வாழ்த்துரை, பாடசாலை அறிக்கைகளுடன், வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம் அன்றும் இன்றும், வயாவிளான் மத்திய மகாவித்தியாலய வரலாறு, தொழிற்கல்விக்குப் பெயர்பெற்ற கல்லூரி, முதல் முத்திரை, நு.ஏ.து.ஹென்ஸ்மன் அவர்களின் சேவைநலம் குறித்த பாராட்டிதழ் ஆகிய வரலாற்றுக் கட்டுரைகளும், திருவாளர்கள் க.அருணாசலம், சி.மயில்வாகனம், இ.நாகரத்தினம், செல்வி சோமசுந்தரம் ஆகியோர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், மாணவர் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39159).