கலைவாதி கலீல். மன்னார்: மன்னார் வாசகர் வட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (மன்னார்: மன்னார் அச்சியந்திரசாலை, மன்னார்: ஜசிந்தா அச்சகம்).
(3), 80 பக்கம், விலை: ரூபா 9.50, அளவு: 18×12.5 சமீ.
மதாறு முகைதீன்-மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி மன்னாரில் பிறந்தார். நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளித்தவர் இவர். தனது பள்ளிப் பருவ காலத்திலே (1956ஆம் ஆண்டில்) “லட்டு” என்ற மாசிகையில் “மறைந்த இருள்” எனும் மகுடத்தில் இவரது முதல் ஆக்கம் வெளியானது. அன்று முதல் சிற்பக்கலை, கரும்பு, கலைக்கடல், செய்தி, மக்கள், தினகரன், வீரகேசரி, தினக்குரல், மல்லிகை, ஈழநாடு, ஞானம், பாமிஸ் மாசிகை, தீப்பொறி, தொழிலாளி, தேசாபிமானி, நவமணி ஆகிய பத்திரிகைகளில் கவிதை, சிறுகதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்வேறு கோணங்களில் தனது எழுத்தாளுமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். 1958 ஆம் ஆண்டில் “கலைக்கடல்” சஞ்சிகையிலும், 1965இல் “மக்கள்” சஞ்சிகையிலும் பின்னாளில் ”நவமணி” பத்திரிகையிலும் ஆசிரியர் பீடத்தில் தடம் பதித்திருப்பவர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் கல்வி கற்று இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS-II) துறையில் தொழில் தகைமை பெற்ற இவர், 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை வில்பத்து-மறிச்சுக்கட்டி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். அன்று தொட்டு பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நூலில் கலைவாதி கலீல் எழுதிய ஒரு வெள்ளி ரூபாய் (1967), வண்டு (1967), யாருக்குப் பெருநாள்? (1967), மையித்து (1967), சகோதரத்துவம் (1968), ஓடப்போறேன் (1968), வர்க்கம் (1968), நோன்புக் கஞ்சி (1969), எனக்கு நானே எல்லாம் (1975), இன்னும் மனிதர்கள் இருக்கிறார்களா? (1976), புதிய அலை (1979) ஆகிய பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன.