ச.தில்லை நடேசன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2017. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 367 பக்கம், விலை: இந்திய ரூபா 300.00, அளவு: 21.5×14 சமீ. யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் பிறந்த நூலாசிரியர் 1988இல் பிரான்சுக்கு புலம்பெயர்ந்தவர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து குழுவின் பிரான்ஸ் கிளையை 1989இல் சுகனுடன் சேர்ந்து உருவாக்கியவர். நடிகர், எழுத்தாளர், நாடக நெறியாளர், கூத்து அண்ணாவியார், ஆய்வாளர் என பல்துறைகளிலும் இயங்கி வருபவர் இவர். வட்டுக்கோட்டை அரங்க மரபு என்னும் இந்நூல் வட்டுக்கோட்டையின் சமூகம், கலை, பண்பாடு ஆகியன சமூக வரலாற்று நிலைகளுக்கு ஏற்ப மாறியவிதம் கலைநுட்பங்கள் அதற்கு பங்களித்தவர்கள் பற்றிய ஆய்வாக விரிகின்றது. இந்நூலில் முனைவர் வீ.அரசுவின் முன்னுரையாக வட்டாரம்-கலை-வாழ்க்கை என்ற அறிமுக உரை இடம்பெற்றுள்ளது. 10 இயல்களைக் கொண்ட இந்நூலில் தமிழ் அரங்க மரபு அறிமுகம், யாழ்ப்பாணம்- வலிகாமம் மேற்கு-வட்டுக்கோட்டை வரலாறும் சமூக அமைப்பும், வட்டூர் சமூகமும் மரபுகளும், வட்டுக்கோட்டை அரங்க வகைகள், வட்டுக்கோட்டை கூத்துகளும் வகைகளும், முகப்பரங்கும் மரபுக் கலைகளும், நாடகம், நவீன நாடகம், புலம்பெயர் சூழலில் கலைகள், போர்க்காலச் சூழலில் அரங்கு, நிறைவுரை ஆகிய பிரதான தலைப்புகளின்கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.