15575 பனி விழும் தேசத்தில் எரிமலை.

கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் (புனைபெயர்: கவி கலி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 138 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0958-08-5.

சுவிட்சர்லாந்தில் வாழும் கவிஞர் கணேசலிங்கம், பனி விழும் தேசத்தின் எரிமலையாக இக்கவிதைத் தொகுதியைப் படைத்துள்ளார். மங்கலம் பாடிக் கவிதையைத் தொடங்காமல் வசைபாடல் என்று தொடங்கிப் புதுமை செய்கின்றார். அவதானிப்பு என்ற கவிதை வழியாக விஞ்ஞானபூர்வமாக எமது வாழ்வின் பக்கங்களை ஊடறுக்கின்றார். விளையாட்டு, காலநிலைத் தஞ்சம் வெற்றி, கொடையில் வந்த மாரி என நீளும் இவரது கவிதைகள் சமூகத்தில் காணப்படும் அவலங்களைப் பாடுகின்றன. மார்கழி 13 என்ற கவிதை 1986ஆம் ஆண்டின் விடுதலை இயக்கங்களின் உள்ளக முரண்பாடுகளைக் கூறி முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதைப் பாடுகின்றது. யுத்தம் வேண்டாம், மொழி, நான் கண்டவை, மேயப்பன் இல்லா மந்தைகள், மனித மாமிசம் மலிவு, மரணம் உன்னைத் தின்னும், பூக்கள், கொண்டாட்டம், போரும் புத்தாண்டும் எனச் சமூக அவலங்களைச் சுட்டும் கவிதைகளாகவே பெரும்பாலான கவிதைகள் அமைகின்றன. குளிர்தேசத்தில் வாழும் இக்கவிஞரின் உள்ளம் ஏனோ எரிமைலையாகக் கொதிப்பதை கவிதைகள் புலப்படுத்துகின்றன. ஜீவநதியின் 102ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் இது.

ஏனைய பதிவுகள்