ஆசிரியர் குழு. நெதர்லாந்து: இலங்கைக் கலாச்சாரக் குழு, Postbus 85326, 3508 A H Utercht, 1வது பதிப்பு, ஆடி 1993. (நெதர்லாந்து: அச்சக விபரம் தரப்படவில்லை).
65 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
அ ஆ இ நெதர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் வெளியிடப்பட்ட ஒரு அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு சிற்றிதழாகும். (இதன் ஆசிரியர் குழவில் நெடுந்தீவு சாள்ஸ் ஆகியொர் பணியாற்றியுள்ளனர்) தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழை வளர்க்கவும், தமிழ் மொழியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ் கலை, கலாசாரங்களைப் பேணிக் கொள்ளவும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படையிலேயே இவ்விதழும் வெளிவந்துள்ளது. முதல் இதழ் சுவடு 1, டிசம்பர் 1989ல் வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் கையெழுத்து வடிவில் இதழாக அச்சாகியிருந்தது. இடைக்கிடையே தமிழ் தட்டச்சு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. கையெழுத்திலும், தட்டச்சிலும் வெளிவந்த இந்த இதழில் பிந்திய இதழ்கள் தமிழ் கணினியில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. இலங்கை அரசியல் நிலைகளை இவை அதிகளவில் அலசி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சஞ்சிகையின் 14ஆவது இதழ் ஆடி 1993இல் புகலிட சிறுகதைகள் சிறப்பிதழாக வெளிவந்திருந்தது. இதில் நெதர்லாந்து -லோகா (அடுத்த தரிப்பு பாகிஸ்தானில்), நோர்வே-தேவகி இராமநாதன் (போயின போயின), நெதர்லாந்து- சாள்ஸ் (இன்று புதிதாய்ப் பிறந்து), பேர்லின், ஜேர்மனி-பொ.கருணாகரமூர்த்தி (ஒரு தரையில் நட்சத்திரம்), பிரான்ஸ்-கலைச்செல்வன் (கூடுகளும் குயில்களும்), லண்டன்-ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (இரவில் வந்தவர்), பிரான்ஸ்-க.கலாமோகன் (ஓர் இலையுதிர்காலத் தொடக்கமும் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும்), பாரிஸ்-சுகன் (ஒரு சனிக்கிழமை பின்னேரம்), பெர்லின்-ந.சுசீந்திரன் (புருஷ வீதிகள்) ஆகிய புகலிடப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.