கே.வீ.எஸ்.வாஸ். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
x, 178 பக்கம், விலை: இந்திய ரூபா 85.00, அளவு: 17.5×12 சமீ.
வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வீ. எஸ். வாஸ், (1912 – 1988) தமிழ்நாடு, கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர். இவர் திருச்சி புனித யோசேப் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். இலங்கையில் வீரகேசரி தினசரிப் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். குந்தளப் பிரேமா (1951), நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற தொடர்கதைகளை ‘ரஜனி’, ‘வால்மீகி’ ஆகிய புனைபெயர்களில் எழுதி ஈழத்துப் பத்திரிகைத்துறையில் பெரும்பங்கு வகித்தவர். இவர் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் இதழில் இலங்கையின் வரலாற்றை ‘ஈழத்தின் கதை’ என்ற பெயரில் எழுதியவர். இந்நூலில் இத்தாலி, கிறீஸ், ஜப்பான், சீனா, எகிப்து, பாரசீகம், மத்திய அமெரிக்கா, ஜெர்மனி, சுமெரியா-பாபிலோனியா, பிரிட்டன்-அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, பின்லாந்து ஆகிய நாட்டு மக்களிடையே காணப்படும் வழிபாட்டுக் கலாச்சாரங்களில் காணப்படும் சில அம்சங்கள் இந்திய கலாச்சாரத்தோடு எப்படிப் பொருந்திவந்துள்ளன என்று இந்நூலில் கர்ணபரம்பரைக் கதைகள், மத வழிபாடுகள், நாட்டார் வழக்காறுகள் ஆகியவற்றின் துணையுடன் விளக்கியிருக்கிறார். ரஜனி அவர்களின் 100ஆவது பிறந்தநாள் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.