மனோன்மணி சண்முகதாஸ். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Hohe 13, 58507 Ludenscheid, 1வது பதிப்பு, 2013. (ஜேர்மனி: Seltmann GmbH).
200 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இயற்கையின் ஊறுகளாலும் செயற்கையின் இடையூறுகளாலும் இன்று பல்லாயிரக்கணக்கான ஈழத்துச் சிறார்கள் கூடு கலைந்த குஞ்சுகளாக சிதறிக்கிடக்கின்றனர். பெற்றோரை இழந்தவர், பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என அவர்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சிறுவர் காப்பகங்களில் அடைக்கலம் பெற்றவர்களை விட ஏனையோர் தம்மைத்தாமே பராமரிக்கும் பாரிய சுமையைச் சுமந்து திரிகின்றார்கள். இத்தகைய சிறுவர்களின் தேடலை 14 ஆண்டுகளாக நேரடியாகக் கேட்கும் வாய்ப்புப் பெற்றிருந்த ஆசிரியர் மனித வாழ்வின் சிதைவுகளை பிஞ்சு முகங்களின் தேடல்களை இந்நூல்வழியாக உலகின் கண்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார். இத்தொடர், முன்னர் பத்திரிகைகளில் வெளியாகி, இக்குழந்தைகளின் நல்வாழ்வுக்கு வேண்டிய நிதி உதவியைப் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தொடரின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் தாயகத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுமுகங்களின் தேடலை, அந்தச் சூழலுக்கே எம்மை அழைத்துச்சென்று எமக்கு உணரவைக்கின்றார். சின்னச்சின்னச் செய்திகள் அந்தக் காலத்தின் கண்ணாடியாகப் பளிச்சிடுகின்றன. களத்தை காட்சிப்படுத்தும் முறை இந்நூலில் முக்கியமானது. இது 21ஆவது வெற்றிமணி வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53394).