13669 ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்(புதுக்கிய பதிப்பு).

ஆ.சதாசிவம் (மூலம்), அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், எஸ்.சிவலிங்கராஜா, கு.றஜீபன் (புதுக்கிய பதிப்புத் தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xxxix, 1042 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ., ISBN: 978-955-7331-04-1.

ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களால் தொகுக்கப்பெற்று, கொழும்பு 7, சாகித்திய மண்டல வெளியீடாக 1966இல் 585 பக்கங்களில் வெளியிடப்பட்டது. மீள் பதிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில், அரிதாகிப்போன அந்நூல் ஐம்பது ஆண்டுகளின் பின்னர் 1042 பக்கங்களில் மீளவும் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. ஈழத்துப் பூதன் தேவனார் காலம் தொடக்கம் 2000ஆம் ஆண்டுவரையிலும் புதுப்பிக்கப்பெற்ற பதிப்பாக இது அமைந்துள்ளது.  இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் கவிதைக் களஞ்சியம் இதுவாகும். சங்ககாலம் தொடக்கம் சமீபகாலம் வரையில் இலங்கையில் வாழ்ந்து மறைந்தவர்களாய் அறியப்பட்டுள்ள ஈழத்தின் எல்லாப் புலவர்களுடைய கவிதைகளுடன் அவர்களது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, காலம், அன்னார் நூல்களிலிருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் மாதிரிகைப் பொருட்டாகத் தேர்ந்தெடுத்த சில செய்யுட்கள் என்பவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துத் தரும் நூல் இதுவாகும். சங்க காலம், யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலம் 1216-1621, போர்த்துக்கேயர் காலம் 1621-1658, ஒல்லாந்தர் காலம் 1658-1796, ஆங்கிலேயர் காலம் 1796-1947, தேசிய எழுச்சிக் காலம் 1948-2000 ஆகிய காலப்பிரிவுகளின் கீழ் இந்நூலில் கவிதைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. புலவர் அகராதி, நூல் அகராதி, செய்யுள் அகராதி என்பன பின்னிணைப்பில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்