நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்). சென்னை 5: பழனியப்பா பிரதர்ஸ், சேப்பாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 1962. (சென்னை 5: ஏசியன் பிரின்டர்ஸ், சேப்பாக்கம்).
(6), xlix, 137 பக்கம், விலை: இந்திய ரூபா 3.00, அளவு: 18×13 சமீ.
சாகுந்தலம் என்பது காளிதாசரால் இயற்றப்பட்ட சமஸ்கிருத மொழி நாடக நூலாகும். வட இந்தியாவிலிருந்து சகர்களை விரட்டிய பெருமைக்குரிய குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் எனும் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் அரசவைக் கவிஞராக திகழ்ந்தவர் காளிதாசர். சகுந்தலா மற்றும் துஷ்யந்தன் காதல் திருமணத்தை விளக்கும் சாகுந்தலம் நாடகத்தில் ஏழு அங்கங்கள் உள்ளன. இதன் உட்பொருள் வியாச மகாபாரதத்தினின்று எடுக்கப்பட்டது. ஆயினும் இலக்கியச் சுவைக்கேற்பச் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. சமசுகிருத மொழி சாகுந்தலம் நாடக நூல் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆர்தர் டபுள்யு. ரைடர் என்பவர் சாகுந்தலம் நாடகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்துள்ளார். விஸ்வாமித்திரருக்கும், மேனகைக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பால் பிறந்தவளும், காசிப குலபதியின் வளர்ப்பு மகளுமான சகுந்தலையின் இவ்வரலாற்று நாடகம், அத்தினாபுரி மன்னன் துஷ்யந்தன், விதூஷகன் மாடவியன், மன்னனின் மகன் சர்வதமனன், கோப்பெருந்தேவி, மாரீசன் போன்றோர் உள்ளிட்ட 33 கதாபாத்திரங்களுடன் ஏழு அங்கங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18453).