சின்னத்துரை வரதராஜன். யாழ்ப்பாணம்: அமரர் சின்னத்துரை வரதராஜன் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
28 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
ஈழத்தின் பிரபல பொருளியல் பேராசானும் முன்னைநாள் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் சின்னத்துரை வரதராஜன் (07.12.1951-18.08.2014), பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் சிறப்புக் கலைமானியான திருமதி சகுந்தலா வரதராஜன் (20.01.1951-20.05.2018) ஆகியோரின் பிள்ளைகளால் அவர்களது நினைவாக வெளியிடப்பட்ட நினைவு மலர். இதில் 20.08.2014 இடம்பெற்ற வலம்புரி நாளிதழின் ஆசிரியத் தலையங்கம் (ஆசான் வரதராஜன் தமிழினத்தின் ஆத்ம பலம்), பல்கலைக்கழக நண்பரான வி.பி.சிவநாதன் அவர்களின் நினைவுப் பேருரை (சின்னத்துரை வரதராஜன், வரதராஜன் சகுந்தலா அவர்களின் நினைவுரை), கலிங்கம் இதழுக்காக வரதராஜன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர் வாழிடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் எமது பாரம்பரிய நிலங்கள் எவ்வாறு பறித்தெடுக்கப்பட்டன என்பது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் இருந்து காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. ‘பொலநறுவை: வரலாற்றிலிருந்து நாங்கள் பாடங்கள் படிக்கவில்லை என்றால் வரலாறு எங்களை மன்னிக்காது’, ‘இலங்கையின் 2012ஆம் ஆண்டு குடிசன மதிப்பீடு-ஓர் அலசல்’ ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டன.