சிவ.ஆரூரன். அல்வாய்: ஆ.சிவலிங்கம், விமானப் பொறியியலாளர், நிலாவில், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).
(6), 400 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-97102-4-0.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவந்தவண்ணமுள்ளன. அந்த வகையில், முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்திரிக்கும் விதத்தில் யாழிசை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இந்த நாவல், இலக்கிய உலகில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நாவலை எழுதிய சிவலிங்கம் ஆரூரன் ஒரு பொறியியல் பட்டதாரி. மெகசின் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக ‘அரசியல்’ கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவ ஆரூரனின் முதல் இலக்கிய முயற்சி இந்த நாவல். சிறைச்சாலையில் நூல் வாசிப்பு மூலம் பெற்ற இலக்கிய அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டு அவர் இந்த நாவலை எழுதியுள்ளார். யாழிசை நாவலின் கதாநாயகி சமூகத்திலே படுகின்ற துன்பங்களையும், கஸ்டங்களையும் இந்தக் கதையின் ஊடாகக் காட்டுகின்ற நாவலாசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் இன்றைய சமூக வாழ்க்கையை குறியீடாக சித்திரித்திருக்கின்றார். 2015ஆம்ஆண்டுக்கான சிறந்த தமிழ் நாவலாகத் தேர்வுபெற்ற இந்நூல் அரச சாகித்திய மண்டல விருதினை 2016இல் பெற்றது. அதேவேளை இந்நாவலின் இரண்டாவது பதிப்பு 2017இல் குமரன் பதிப்பகத்தினரால் அச்சிடப்பெற்று அவ்வாண்டின் வாசிப்பு மாதத்தையொட்டி இலங்கையின் முக்கிய பாடசாலை நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.