கே.ஏ.அப்பாஸ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 17: குயிலன் பதிப்பகம், 82, பாண்டி பஜார், தியாகராய நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1964. (சென்னi 14: முல்லை அச்சகம், 258, பைக்கிராப்ட் ரோடு).
54 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00, அளவு: 18.5×12.5 சமீ.
இந்தியப் படைப்பாளி கே.ஏ.அப்பாஸ் அவர்களின் குறுநாவலான அஜந்தா, கே.கணேஷ் அவர்களின் கைவண்ணத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. முற்றுப்பெறாத குகையில் ஒலித்துக்கொண்டிருக்கும் புத்த பிக்குவின் உளியோசை, பரிபூரணத்துவத்தை நோக்கி முன்னேற மனிதன் பாடுபடவேண்டுமென்ற பெரிய நோக்கத்தைப் போதிக்கின்றது. கே. கணேஷ் (மார்ச் 2, 1920-ஜுன் 5, 2004) இலங்கையின் மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்த இவர், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார். நவசக்தி, லோகசக்தி போன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார். 1946 இல் இலங்கையில் ‘பாரதி’என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே. இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 887).