10492 இலக்கிய உலகம்.

வி.கந்தவனம். சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை, 3வது பதிப்பு, ஜுன் 2007, 1வது பதிப்பு, டிசம்பர் 1964, 2வது பதிப்பு, நவம்பர் 1994,  (சென்னை:அச்சக விபரம் தரப்படவில்லை)

80 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 45., அளவு: 21.5×14 சமீ.

இலங்கை எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழ் மரபு பிறழாதவாறு இலக்கியங்கள் பலவற்றை இயற்றித் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் இலங்கையில் மேன்மையுறச்செய்யவேண்டும் என்ற கருத்தை சீரிய ஓசைச் சிறப்புள்ள செய்யுள்களின் வழியாக இந்நூலில் வலியுறுத்தியுள்ளார். முதலாவது பகுதியில் இலக்கியம் என்றால் என்ன, அது ஏன் யாரால் எங்கே எப்போது எப்படிப் பிறக்கின்றது என்று மரபுக்கவிதைகளின் வடிவில் விளக்குகின்றார். இரண்டாவது பகுதியில் மரபு என்றால் என்ன? மரபை மீற வேண்டுமா? புதுமை வேண்டும், இரவல் புதுமையாகாது, புதியது மரபிலிருந்தே வந்திட வேண்டும் ஆகிய தலைப்புகளில் தனது கருத்தை கவிதையுருவில் தருகிறார். மூன்றாவது பிரிவில் ஆற்றல் இல்லையென்று காட்டுவதேன்? நல்லறிவாண்மை இருக்கிறதா? நிலையான இலக்கியம் வேண்டும், பயனிலக்கியம் படையும், தனித்துவம் வேண்டும், பெரியோர், செந்தமிழ் எழுதுக, ஒற்றுமை வேண்டும்; இலக்கியத்தைச் சமைத்துத் தாரும் ஆகிய தலைப்புகளினூடாகத் தன் கவிவரிகளால் இலக்கிய உலகம் பற்றித் தனது கருத்துக்களை விதைத்துச்செல்கிறார். நான்காவது பிரிவில் ஈழத்து மக்களே, மதிப்புடன் சுவைப்பவர் வேண்டும், கொள்கையற்றோர் படைப்பைப் படித்துப் பயனென்ன, இலக்கிய உலகம் ஆகிய தலைப்புகளில் தன் கருத்தை கவிதையாக்கியிருக்கிறார். மொத்தம் 24 தலைப்புகளில் இவரது மரபுக்கவிதைகளினூடாக ஒரு இலக்கிய உலகம் இந்நூலில் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48148.) பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2476, 6 A 04 )

ஏனைய பதிவுகள்