சௌந்தரி கணேசன். தமிழ்நாடு: வளரி எழுத்துக் கூடம், 32, கீழரத வீதி, மானாமதுரை 630 606, சிவகங்கை மாவட்டம், 1வது பதிப்பு, சித்திரை 2015. (சிவகாசி: மீரா பைன் ஆர்ட்ஸ்).
96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு உயிர்கொடுக்கும் சக்தி கவிதைகளுக்குண்டு கல்லைக் கூடக் கனியவைக்கும் சக்திமிக்கவை நல்ல கவிதைகள். அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இத்தொகுப்பும் அமைகின்றது. எளிமையான சொற்களைக்கொண்டு ஓசைநயம் வெளிப்பட இத்தொகுப்பை கவிஞர் சௌந்தரி கணேசன் வழங்கியுள்ளார். ஒவ்வொரு கவிதைகளினூடாகவும் வாழும் இக்கவிஞர் அன்பு, இரக்கம், துக்கம், உறவுகளின் நேசம், காதல், நட்பு, பிரிவு என மனிதனின் பல்வகை உணர்வுகளையும் இந்நூலின் கவிதைகளினுடாகப் பிரசவித்துள்ளார். கவிதைகளுக்கான பொருத்தமான தலைப்புகளும் கவிதைக்கு மெருகூட்டுவதாயுள்ளன. ஈழத்தில் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரி புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கணக்கியல்சார்ந்த துறையொன்றின் நிர்வாக மேலாளராகப் பணியாற்றுகின்றார். இவர் வளரி கவிதை இதழின் இணை ஆசிரியராவார். இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் கணிதத்துறையில் இளம் அறிவியல் பட்டமும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நியூசிலாந்து, சாம்பியா ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியையாகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இந்நூல் வளரி எழுத்துக் கூடத்தின் நான்காவது வெளியீடு.