வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). மன்னார்: வேலு சந்திரகலா, 1வது பதிப்பு, மார்ச் 2017. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 32 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16×10.5 சமீ., ISBN: 978-955-41027-3-6. மன்னாரில் அடம்பன் கிராமத்தில் பிறந்த வெற்றிச்செல்வியின் இயற்பெயர் சந்திரகலா. இளமைக்கனவுகளை துறந்து ஈழக்கனவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1991 இல் இணைந்துகொண்டவர். 1993 இல் தமது ஒரு கையையும் ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தவர். அத்துடன் அவர் ஓய்வுபெறவில்லை. வீட்டுக்குத்திரும்பவில்லை. 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இறுதிப்போர் வரையில் வெற்றியின் நம்பிக்கையோடும் ஓர்மத்துடனும் களத்தில் நின்றவர்.நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதித்தருணம்வரையில் களத்தில் நின்றவர்கள் பலராயிருந்தபோதிலும், அங்கே என்ன நடந்தது என்பதை எல்லோராலும் ஆவணப்படுத்த முடியாது. வெற்றிச்செல்வி, மக்களின் இழப்புகளையும் அவர்கள் தக்கவைத்திருக்கும் வலிகளையும் அவர்களின் எதிர்காலம் பற்றிய ஏக்கங்களையும் உணர்ச்சிபொங்க பதிவுசெய்துள்ளார். அதேசமயம் போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் மனநிலையையும் அவர்கள் போராளிகளை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள் என்பதையும் சித்திரிக்கின்றார். வெற்றிச்செல்வி ஓராண்டு காலம் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் இருந்தபோது எழுதிய கவிதைகள் இவை. தடுப்ப முகாம்களில் வாழ்ந்தவர்களது சிரமங்கள் சொல்லில் அடங்காதவை. அவற்றில் சில பகுதிகளை, தவிப்புகளை ஒரு அண்ணனுக்கு எழுதும் தங்கையின் கடிதங்களாக இக் கவிதைகள் பதிவுசெய்கின்றன. புனர்வாழ்வு முகாம் வாழ்வின் நெருக்கடிகளுக்குள் எழுதப்பட்டவை இவை.