ஸ்ரீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க (மூலம்), ஏ.எம்.சம்சுதீன் (தமிழாக்கம்). கொழும்பு 10: பாலச்சந்திர ஆராய்ச்சிகெ டெபன் மார்ஷல் பெரெரா, 68/11 தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு 10: சுஹத அச்சகம், 674/10, 2ம் டிவிஷன், மருதானை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
7.5.1980அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஆட்சியின்போது , இலங்கையின் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் ஏழாண்டுகள் அரச பணிகள் எதனிலும் ஈடுபடமுடியாதவாறு தடைசெய்யப்பட்டார். அவருக்கெதிரான விசாரணைக்கமிஷனொன்றும் உருவாக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் 7.5.1980 அன்று ஸ்ரீமாவோ பங்கேற்று, தனது பக்க நியாயங்களை வெளிப்படுத்தி விசாரணைக்கமிஷனின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கித் தன் உரையை ஆற்றியபின் அந்த விசாரணைக்கொமிஷனில் தான் தொடர்ந்தும் பங்கேற்பதில்லை எனக்கூறி வெளியேறினார். அரசியல் முக்கியத்துவமான அவரது உரையின் தமிழ் வடிவம் இதுவாகும். தன் கணவரின் மறைவுக்குப் பின்னர் 1960இல் அரசியலில் ஈடுபட்ட இவர் 21.7.1960இல் உலகின் முதலாவது பெண் பிரதமராகப் பதவியேற்றார். 1980இன் பின்னர் நீண்டகாலம் அரசியல் இவருக்கு சாதகமாக அமையவில்லை. 1994இல் இவரது மகள் சந்திரிகா ஆட்சியைக் கைப்பற்றி ஜனாதிபதியானயதும் தனது அன்னையை மீண்டும் ஆட்சிக்கட்டிலேற்றி பிரதமராக்கினார். ஆயினும் சில மாதங்களில், 10.10.2000 அன்று சுகவீனம் காரணமாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மரணமானார். இந்நூலை தமிழாக்கம் செய்தவர் கல்முனைப் பிரதேசத்தின் சட்டத்தரணியாவார்.