வைத்தியரட்ணம் பத்மானந்தகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 122 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 375., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-283-2.
காட்டுப் பிரதேசங்களை விவசாய நடவடிக்கைகள், நகரமயமாக்கல் போன்றவற்றிற்கு மாற்றியமைத்ததன் காரணமாக புவி மேற்பரப்பில் மானிட நடவடிக்கையால் பாதிக்கப்படாமல் காணப்பட்ட காட்டுப் பரப்பானது தற்போது அதன் ஆரம்ப அளவிலிருந்து ஐந்தில் ஒரு பகுதியாகச் சுருங்கியுள்ளது. மேலும் அண்மைக்காலமாக காடழிப்பானது மிகவும் அதிகரித்து தற்போது அது மத்திய கோட்டுக் காடுகளை மையங்கொண்டதாகக் காணப்படுகின்றது. மானிட சமூகத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு மத்தியகோட்டுக் காடுகளின் தொடர்ச்சியான நிலைப்பின் அவசியம் அதிகரித்துச் செல்லும் சூழலில் இந்நூலானது மத்தியகோட்டுக் காடுகளை தமிழ் வாசகருக்கு அறிமுகப்படுத்துவதுடன் அது அழிந்துவருவதற்கான நேரடி, மறைமுகக் காரணிகளை விபரிக்கின்றது. அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தினையும் இந்நூல் வலியுறுத்துகின்றது. மத்தியகோட்டுக் காடுகள், மத்தியகோட்டுக் காடழிப்பை ஏற்படுத்தும் மறைமுகக் காரணிகள், மத்தியகோட்டுக் காடழிப்பை ஏற்படுத்தும் நேரடிக் காரணிகள், மத்தியகோட்டுக் காடழிப்பால் ஏற்படும் விளைவுகள், பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தில் மத்தியகோட்டுக் காடழிப்பின் பங்கு ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் விரிகின்றது. வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேசத்தில் பிறந்த வை.பத்மானந்தகுமார் (07.09.1980), தனது ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு, பாலிநகர் மகாவித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரியில் பெற்றவர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறையில் பட்டம் பெற்று, நோர்வே நாட்டுக்கு புலமைப்பரிசில் பெற்றுச்சென்று அங்கு Norwegian University of Science and technology NTNU இல் இயற்கைவள முகாமைத்துவத் துறையில் பயின்று 2009இல் தனது MSc பட்டத்தினைப் பெற்றுக்கொண்டவர்.