கலையார்வன் (இயற்பெயர்: கு.இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ்).
xvi, 160 பக்கம், விலை: ரூபா 300.,அளவு: 21×14.5 சமீ.
கூத்துக்கலை நாடகத்தமிழில் அங்கம் வகிப்பது. நாடகத்தமிழை விளக்கும் வகையில்முகபாவ அங்க அசைவுகளோடு பாடி, கதாபாத்திர உணர்வுகளை கூத்துக் கலைஞர்கள் வெளிப்படுத்துவர். அவ்வேளையில் தாளக்கட்டு பிசகாமல் பாடல்களைப் பாடி நடிப்பது முக்கியமானதாகும். நடிகரின் நடிப்புக்கு வழங்கும் அதே முக்கியத்துவம் பாடலை தாளக்கட்டு பிசகாமல் இசைவளத்தோடு பாடுவதற்கும் வழங்கப்படும். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு கலையார்வன் இராயப்பு அவர்கள் ஐந்து குறுங்கூத்துகளைத் தயாரித்து இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். வழமையான பழைய கூத்துக்களிலிருந்து விடுபட்டு புதிய கதைகளை சகுந்தலை, அனார்க்கலி, காசியப்பன், மந்தரை சூழ்ச்சி, சங்கிலி செகராசசேகரன் ஆகிய இக்கூத்துக்கள் கொண்டுள்ளன. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு சம்பவத்தையும் மக்கள் ரசனைக்கேற்ப நாடகக் கதையாக்கித் தனது அனுபவத்தின் செழுமையைப் பயன்படுத்தி ஆக்கித்தந்துள்ளார். பின்னிணைப்பாக வகைமாதிரிக்காக மாதிரி காப்பு பாடல்கள், மாதிரி வாழி பாடல்கள், மாதிரி மங்களம் பாடல்கள் என்பன இடம்பெற்றுள்ளன.