செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2009. (சென்னை: சிவம்ஸ்).
188 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ.
நீண்ட பயணம் என்ற தனது முதலாவது நாவலை 1965இல் தந்த படைப்பாளி, செ.கணேசலிங்கத்தின் ஐம்பதாவது நாவல் இது. மானிய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பிற்கு மாறும் சமுதாயத்தைச் சித்திரிக்கும் இந்நாவல் செ.கவின் பிறநாவல்களான சடங்கு, செவ்வானம் என்பன போன்றதாகும். இந்நாவலில் ஆசிரியர் இரண்டு சிறப்பான விடயங்களைக் கூற முனைகின்றார். அரசியலிலும் மதத்திலும் மக்கள்திரள், எக தலைவனின் கீழ் திரட்டப்படுவதைக் காண்கின்றோம். அரசியலில் கட்சித் தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். அதே வேளை கட்சித் தலைவனுக்கு ஆபத்து, நெருக்கடி ஏற்படும்போது தம்மையறியாது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டு இரத்தம் சிந்தவும் மரணிக்கவும் தயாராகின்றனர். அதே போன்று மதங்களிலும், மதகுருமார், சாமியார் காட்டும் வழியில் கட்டுப்பட்டு நின்று அவர்களுக்காக தம்மையறியாது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டு இரத்தம் சிந்துவதையும் மரணிப்பதையும் காண்கின்றோம். இத்தகைய மக்கள் திரள் செயலுக்கு உளவியலாளர், சமூகவியலாளர் பல்வேறு விளக்கங்களையும் காரணங்களையும் கூறுவர். இந்நாவலில் பேராசிரியர் என்ற பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் விளக்கம் காண முனைகின்றார்.