கு.பூபதி (தொகுப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்).
464 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-09-9.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் பற்றிய பல்வேறு உலகப் பிரமுகர்களினதும், ஊடகவியலாளர்களினதும் நினைவுப்பதிகை இதுவாகும். தாயகம், அயலகம், தமிழகம், ஊடகம், ஆவணம் ஆகிய பிரிவுகளின்கீழ் இக்கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வே. பிரபாகரன் பற்றிய காசி ஆனந்தனின் கவிதை ஒன்றுடன் தொடங்கும் இத்தொகுப்பில், பிரபாகரன் போராட்ட வாழ்க்கை என்ற அறிமுகக்கட்டுரை 40 பக்கங்களில் நுழைவாயிலாக விரிகின்றது. தொடர்ந்து தாயகம் என்ற பிரிவின்கீழ் அன்ரன் பாலசிங்கம், வே.இளங்குமரன், எல்லாளன், கண்மணி, ச.வே.டேவிட், ந.தமிழன்பன், தினேஷ் மாஸ்டர், கி.செ.துரை, நாவண்ணன், இ.பரராஜசிங்கம், க.வே.பாலகுமாரன், க.பிருந்தன், புதுவை இரத்தினதுரை, ச.பொட்டு, வே.மனோகரன், ஜோசப் பரராஜசிங்கம், யாழினி ஆகியோர் எழுதிய 17 ஆக்கங்களும் பெயரிடப்படாத ஒரு ஆக்கமுமாக மொத்தம் 18 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அயலகம் என்ற பிரிவில் அடேல் பாலசிங்கம், அல்பேர்ட் கூலன், எஸ்.ஜெ.இம்மானுவேல், இரவி அருணாச்சலம், இராஜகுலேந்திரன், பேராசிரியர் இராமசாமி, வி.உருத்திரகுமாரன், எதிர்வீரசிங்கம், பொ.சத்தியசீலன், சிறீஸ்கந்தராசா, செவாலியர் யூலியா, டியற்றி மக்கொனல், பரணி, சூ.யோ.பற்றிமாகரன், பிரையன் செனவிரத்ன, பீற்றர் சால்க், புவிச்சந்திரன். கே.மகேஸ்வரன், முருகர் குணசிங்கம், ரம்ஷி கிளார்க், வாசுதேவன், கே.ஜவகர்லால் நேரு ஆகியோர் எழுதிய 22 நினைவாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் என்ற பிரிவில் அப்துல் ஜபார், சீமான், பா.ஜெயப்பிரகாசம், தியாகு, தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், பண்ருட்டி இராமச்சந்திரன், மணவை முஸ்தபா, பெ.மணியரசன், வை.கோ. ஆகியோரின் பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஊடகம் என்ற பிரிவில், அக்னி, அனிதா பிரதாப், கலையரசன், கோபாலரத்தினம், எஸ்.சிவநாயகம், சிவநேசச்செல்வன், இரா.திருமாவளவன், ஜி.நடேசன், விக்டர் ஐவன், கி.ஜெய்சந்தர் ஆகியோரின் 10 கட்டுரைகளும், ஆவணம் என்ற பிரிவில் எம்ஜிஆரும் புலிகளும், ராஜீவ் பிரபா சந்திப்பு, பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனம் ஆகிய தலைப்புகளில் அன்ரன் பாலசிங்கம் எழுதிய மூன்று கட்டுரைகளும், காவிய நட்பு என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. வே.பிரபாகரன் பற்றிய வாழ்வும் பணியும் இக்கட்டுரைகளின் வழியாக விரிவாகப் பேசப்படுகின்றன.