ஞா.ம.செல்வராசா (பாடியவர்), எஸ்.செபஸ்தியாம்பிள்ளை (பாடுவித்தவர்), சில்லையூர் செல்வராசன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: காவலூர் புனித அந்தோனியார் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1972. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
xii, 104 பக்கம், புகைப்படத் தகடு, விலை: ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ.
ஞானசவுந்தரி நாடகத்தைத் தென்பாங்குக் கூத்துவடிவில் தமிழிற் பாடியவர் மாதோட்டப் புலவர் சூசைப்பிள்ளை மரிசாற்பிள்ளை. புலவர் மரிசாற்பிள்ளை மன்னார் முசலிப் பகுதி புதுவெளிக் கிராமத்தில் வாழ்ந்த பிரசித்த நொத்தாரிசும் வித்துவானுமாகிய மு.நெயினா முகம்மது மரைக்காயருடன் கல்வித்தொடர்பு கொண்டிருந்தவர். ஆயுர்வேதம், சோதிடம் போன்றவற்றில் ஈடுபாடுகொண்டிருந்தவர். 1905ம் ஆண்டில் தம் வாசஸ்தலத்தை கற்கிடந்த குளத்திலிருந்து நானாட்டானுக்கு மாற்றிக்கொண்ட பின்னர் பெரியகட்டைக்காடு சின்ன வயித்தியாம்பிள்ளை என்னும் பெருமகனார் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்நாடகத்தைப் பாடினார். இந்நாடகம் 1910ம் ஆண்டில் பெரியகட்டைக்காட்டிலும், 1920ம் ஆண்டில் நானாட்டானிலும், 1942இல் அடம்பனிலும் மேடையேற்றப்பட்டது. இது இரண்டு இரவுகளாகத் தொடர்ந்து ஆடப்பெறும் கூத்தாகும். இத்தகைய பின்னணியுடனான ஞானசவுந்தரி பின்னாளில் காவலூர் (ஊர்காவற்றுறை) அந்தோனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழா ஆவணி 1972இல் கொண்டாடப்பட்ட வேளையில், இக்கல்லூரியில் தொழில்நுட்பப் பயிற்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்டிடமொன்றை நிறுவ முன்வந்த பழைய மாணவர்களின்; நிதி சேகரிப்பிற்காக அக்கல்லூரியின் பழைய மாணவர்களால் மீளப்பாடி மேடையேற்றப்பட்டது. அதன் நூலுருவே இதுவாகும்.