14607 சிறையில் இருந்து மடல்கள்.

மாயன் (இயற்பெயர்: இரா.சிறீஞானேஸ்வரன்). திருக்கோணமலை: இரா. சிறீஞானேஸ்வரன், 159A, கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2016. (திருக்கோணமலை: சிறீராம் அச்சகம், 159A, கடல்முக வீதி). 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-44182-1-4. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்தியாகவே வேண்டும் என்ற நிலை தோன்றிய நேரமெல்லாம் இக்கவிஞரின் எழுத்தாணி வரைந்த ஓவியங்களே இக்கவிதைகள். நினைவு தெரிந்த நாள் முதல் சுதந்திரப் போரின் பல்வேறு பக்கங்களிலும் பயணித்த தனது வாழ்வில் போரைப் பாடாது தனது எழுத்து சாத்தியமாகாது என்கிறார். அகிம்சையையும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் எமக்கு மட்டும் போதித்துவிட்டு அருவருக்கத்தக்கதும் மனித இன மாண்புகளுக்கு எதிரானதுமான அவல வாழ்வைப் பரிசளித்தபோதே போதனைகளால் எம்மைப் பாதுகாக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட இனத்தின் ஒரு அங்கத்தினனாக இருந்து இக்கவிதைகளைப் பாடுகிறார். இயல்பாகவே இக்கவிதைகளில் எழும் தார்மீகக் கோபங்களுக்கு அதுவும் ஒரு காரணமாகின்றது. தமிழின உறுதியும், அவலமும், நம்பிக்கையும், நிராசையுமாக தன்னை அலைக்கழித்த வாழ்நிலையை உணர்ச்சிபொங்கும் கவிதைகளால் பதிவுசெய்திருக்கிறார். மீளக் குடியமர்வு, காணாமற் போனவர்கள், கடந்த இரவும் எனது நிலமும், தொலைந்த நீயும் தெருவிளக்கொளியும், உயிர்ப்பேன் நான் மறுபடியும், அலைதல், ஒரு போர்வீரனாய், பொடிமெனிக்கே, துளிர்ப்போம் தாயே, சிறையில் இருந்து மடல்கள் என இவரது கவிதைக்களம் இத்தொகுப்பில் பரந்து விரிந்துள்ளது.

ஏனைய பதிவுகள்