கந்தர்மடம் அ.அஜந்தன். சாவகச்சேரி: அரியராசா அஜந்தன், சண்முகம் வீதி, 1வது பதிப்பு, சித்திரை 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). xi, 96 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43107- 0-4. முல்லைத்தீவில் Save the Children நிறுவனத்தின் சிரேஷ்ட செயற்றிட்ட அலுவலராகப் பணியாற்றும் கந்தர்மடம் அ.அஜந்தனின் “முதுமை” தொடக்கம் “கைம்பெண்” ஈறாக 82 கவிதைகளைத் தாங்கிய முதலாவது கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் தன் வாழ்வில் தான் சந்தித்தவற்றில் சிந்தித்தவற்றை சிறு வரிகளுக்குள் அடக்கி ஊடகங்களில் அவ்வப்போது வெளியிட்டுவந்தவர். தம்மைப் பாதிக்கும் சந்தர்ப்பங்களை வெறும் சம்பவங்களாகப் பார்த்துக் கடந்து செல்லாமல், அதனை யதார்த்த வாழ்வியலோடும் தேடலுடன்கூடிய உணர்வுபூர்வமாகவும் இயற்கையோடு ஒத்துணர்ந்தும் பொருத்தமான கற்பனையுடன் சில வரிகளில் சொல்லத் துடிக்கிறார். கவிதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. “கனவுகள் சமைந்திட்ட வாழ்வு, இதில் பலித்திட்ட கனவுகள் எத்தனை கூறு” என மானிட வாழ்வு என்ற கவிதை சந்தங்களுடன் தொடர்கின்றது. சிறைக்கதவு திறந்திடுமோ, ஊனம் இங்கு ஏது, கலைந்திடும் கனவுகள், மனமெனும் கூடு எனக் கவிதைகள் நீள்கின்றன. தேசிய/ யாழ். பிராந்தியப் பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.