14749 எரிமலை: நாவல்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 208 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 8354-81-0 1984ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டு, பதினெட்டு அத்தியாயங்களில் விரியும் இந்நாவலில் அரசியலே பேசுபொருளாக விளங்குகின்றது. ஈழத்தமிழினத்தின் நிலைபற்றி, இன ஒடுக்குமுறை பற்றி, அதனால் விளைந்த பின்னடைவு துயரம் பற்றி, இனத்துவேசம் வளர்ந்ததால் தலைவிரித்தாடிய இனவன்முறைக் கலவரம் பற்றி, இவைகளுக்காக நடந்த சாத்வீகப் போராட்டங்கள் பற்றி, சாத்தியமாகாத பட்சத்தில் ஆயுதப் போராட்டம் வளர்ந்தோங்கியது பற்றியெல்லாம் இந்நாவல் பேசுகின்றது. சாதவீகப் போராட்டங்களாகத் தொடங்கி ஒருகட்டத்தில் ஆயுதப் போராட்டமாகப் பரிமாணம்பெற்ற இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் ஒரு முழுமையான பார்வையை வாசகருக்குத் தருகின்றது. இந்நாட்டில் வாழும் சகலமக்களது நல்வாழ்வுக்கும் நாட்டின் சுபீட்சத்துக்கும் தடையாக அரசியல்வாதிகள் எவ்வாறு இனத்துவேஷத்தைக் கையாண்டு வருகிறார்கள் என்பதையும் இந்நாவல் தோலுரித்துக்காட்டுகின்றது. ஒரு காலகட்டத்து மக்களின் அரசியல், பண்பாடு, சிந்தனைகள், உணர்வுகள், செயற்பாடுகள் பற்றிக் கலைத்துவத்தோடு உணர்த்துகின்றது. போர் தொடங்கிய காலத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களின் மனநிலை எவ்வாறிருந்தது எத்தகைய அவலங்களை அவர்கள் எதிர்கொண்டனர்? இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்போது மலையக மக்கள், முஸ்லிம் மக்கள் நிலை யாது? சிங்கள மக்களின் மனநிலையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தலாம்? என்று பல கோணங்களில் நின்று அகன்ற, ஆழமான, தெளிவான, திடமான பார்வையோடு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் சிங்களப் புத்திஜீவிகளும் பாத்திரங்களாக வருகின்றனர். தென்னிலங்கையில் இருந்து வந்த ஒரு சிங்கள குடும்ப நண்பர்கள் மூலமாக அவர்கள்தம் நிலைப்பாட்டையும் வாதப் பிரதிவாதங்களையும் சொல்லவைத்து, எமது நிலைப்பாட்டையும் நியாயப்பாட்டையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி தெளிவுபடுத்தியிருக்கின்றார். சந்திரன் அனுலா தமிழ் சிங்கள காதல் ஜோடியை இடைக்கிடை உலாவவிட்டு பூங்காற்றையும் கதாசிரியர் வீசவைக்கிறார். 1948 முதல் 1984 வரையான பின்புலத்தில் ஒவ்வொரு காலகட்ட இனசங்காரங்களை ஆவணப்படுத்தும் நோக்கிலும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவற்றைத் தெரிவிக்கும் வகையிலும் இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமையோடுகூடிய பிரதேச சுயாட்சியே, எல்லோருக்கும் சுபீட்சம் தரும் வழியாகும் என்று முன்மொழிந்து கதையை நிறைவு செய்கிறார்.

ஏனைய பதிவுகள்

14368 இந்து நாதம்: 1985. மலர்க் குழு.

கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).(92) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5