இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு ulu.com சுய வெளியீடு உதவி). 229 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0- 244-40626-4. வாழ வந்த இந்தத் துருவ தேசத்தில் இன்றைய சிறந்த பொருளாதார நிலைக்கு வருவதற்கு ஒவ்வொரு தமிழனும் தாங்கிய வேதனைகள் ஓங்கிய மலைகளைவிட உயர்ந்து நிற்கும். எம்மவர்கள் உதாரண புருசர்களாக இன்று இங்கே காட்டப் படுவதற்கு அவர்கள் இழந்தவை நிறையவே உள்ளன. இழப்புக்களின் யாகத்தில் வெற்றிகள் விளைவது இந்த உலக நியதி ஆகிவிட்டது. தமிழர்களின் இழப்புக்களில் அவர்களின் இன்றைய வெற்றி, பனி தேசத்திலும் துளிர் விட்டு, வேரூன்றி, குளிர் வென்று, இங்கே பரிணமித்து நிற்கிறது என்பது மிகைப்படுத்தல் அல்ல. அவர்கள் தமது ஒவ்வொரு அடியையும் எவ்வளவு வேதனையோடு, ஓர்மத்தோடு, எடுத்து வைத்திருப்பார்கள்? அதை எல்லாம் வென்று இன்றைய காலத்திற்கும், வருங்காலச் சந்ததிக்கும் நாம் கடந்து வந்த பாதையில் சிலவற்றைப் பார்ப்பதற்கு ஒரு காலதர் தேவைப்படுகிறது. அந்தப் பேசாப்பொருளை, அழியாத அந்த இரணத்தை, மொழியா அந்த வலிகளை ஆசிரியர் இங்கு இந்நாவலில் மீண்டும் மொழிய முனைந்துள்ளார். அதற்கான காலதரை முழுமையாகத் திறக்க முடியாவிட்டாலும் ஒரு சிறிதளவேனும் திறக்கவேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே இந்நாவலாகும். நாவலின் முதலாம் பாகத்தில் மற்றாஸ் விமான நிலையம், அவர்கள், தொடர்ந்த பயணம், உலகம் விரிந்தது, பாரிஸ் விமான நிலையம், ஒஸ்லோ விமான நிலையம், சண்வீக்கா, ஐரோப்பா என்னும் சொர்க்கம், விசாரணை, அழகிய விடுதி, அவன் நினைவு, தோணிகள் ஓட்டி, அனாகி, மலைதேசத்திற்கு, விடுதி வாழ்க்கை, பிரியாவிடை ஆகிய 16 அத்தியாயங்கள் விரிந்துள்ளன.