பசுந்திரா சசி (இயற்பெயர்: செட்டியூர் பசுபதி சசிகரன்). கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: கௌரி அச்சகம், ஆட்டுப்பட்டித் தெரு).
xvii, 299 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-9396-69-7.
தொல்லியலாய்வை மேற்கொள்ள அமெசான் காட்டுப்பகுதிக்குச் செல்லும் சீனு அங்கு கச்சுவா மொழிபேசும் பழங்குடியினரிடையே ஒரு இளம்பெண்ணின் மீது காதல் கொள்கிறான். வட அமெரிக்கக் காட்டுவாசியையும், இங்கே வன்னிப் பெருநிலப் பரப்பின்; ஒரு கோடியிலுள்ள செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழ் இளைஞனையும் கண்காணாத காட்டில் காதல் இணைக்கின்றது. ஒவ்வொரு கணமும் மரணத்துடனும் இயற்கையின் சீற்றத்துடனும் போராடி இயற்கையோடிணைந்த வாழ்வு வாழும் அவளைப்பிரித்து தென்னமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கும் அங்கிருந்து பாக்கு நீரிணையூடாக மன்னாருக்கும் அழைத்து வருகிறான். தனக்கு மனைவியாகும் தகுதி அவளுக்கே உண்டென்பதைத் தன் குடும்பத்தினருக்குக் காட்டும் முயற்சிகளும், அவர்களைப் பக்குவப்படுத்தி மனதை மாற்றும் முனைப்புகளும், அதற்காகக் கையாளும் தந்திரங்களும் கதையை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கின்றன. காமுகன் தவராசா கதையில் ஒரு வில்லன் பாத்திரம். அவனது பொய்ப்பிரச்சாரங்கள், சூழ்ச்சிகள், காரணமாக இடம்பெறும் நீதி விசாரணைகள், சிறைவாசம், நாடுகடத்தல் என்று தொடரும் கதை இறுதியில் இருவரையும் காட்டுக்கே கொண்டுசேர்க்கின்றன. அமெசான் காட்டை பின்பலமாகக் கொண்டு மிக நுணுக்கமான அறிவியல் தகவல்களுடன் ஒரு புனைகதைவடிவில் தமிழில் வெளிவந்துள்ள முதல் நாவல் இதுவாகும். பசுந்திரா சசியின் முதல் நாவல் என்று நம்பமுடியாத அளவுக்கு வற்றாத கற்பனை வளமும், சுவாரஸ்யமான காட்சியமைப்புகளும் நாவலை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. செட்டிகுளத்தைச் சேர்ந்த சசிகரன் தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருகிறார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நாவல் நூலுக்கான பரிசை வென்ற நூல்.